காலண்டரில் புகைப்படம் போடுவதில் தொடங்கி, சுவர் விளம்பரத்தில் பெயர் போடாமல் எழுதுவது என, திருப்பூர் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கும், திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க-வின் வடக்கு மாவட்டச் செயலாளருமான செல்வராஜுக்கும் இடையிலான `ஈகோ மோதல்’ தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதாகக் கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது. பல்லடம் அருகே அண்மையில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

பொங்கலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற புதிய சாலை உள்ளிட்ட பணிகளை மாவட்டச் செயலாளர் செல்வராஜ் முதல்நாள் பூமி பூஜை போட்டு தொடங்கிவைக்க, அடுத்த நாளே அதே பணிகளை ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சகிதம் சென்று வேறு இடத்தில் மீண்டும் பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தார், அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஒரே திட்டத்துக்கு அமைச்சர் ஒரு பக்கம், எம்.எல்.ஏ ஒரு பக்கம் என மாறி மாறி பூமி பூஜை நடந்ததால், திருப்பூர் தி.மு.க-வுக்குள் என்னதான் நடக்கிறது என நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.

எம்.எல்.ஏ செல்வராஜ்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், “திருப்பூர் மாவட்ட தி.மு.க-வில் இதற்கு முன்பு மு.பெ.சாமிநாதன், க.செல்வராஜ், இல.பத்மநாபன், ஜெயராமகிருஷ்ணன் என நான்கு மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை இரண்டாகக் குறைத்து, திருப்பூர் வடக்குக்கு எம்.எல்.ஏ செல்வராஜையும், திருப்பூர் தெற்குக்கு இல.பத்மநாபனையும் மாவட்டச் செயலாளர்களாகத் தலைமை நியமித்தது.

பிரச்னைக்கு தெற்கு மாவட்டச் செயலாளரான இல.பத்மநாபனும் காரணம் எனச் சொல்லலாம் . அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆதரவாளரான அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மூலனூரிலிருந்து வீட்டை பல்லடத்துக்கு மாற்றினார். ஆனால் பல்லடம் தொகுதி ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைக் குறிவைத்து, வீட்டைத் திருப்பூருக்கு மாற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேயர் பதவிக்குக் காய் நகர்த்திப் பார்த்து அதுவும் கிடைக்காததால், 4-ம் மண்டலக் குழுத் தலைவர் பதவியை அமைச்சர் மூலம் பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தற்போது, மீண்டும் வீட்டை மூலனூருக்கு மாற்றிக்கொண்டு, தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் வாங்கிக் கொண்டார். ஏற்கெனவே, நான்கு மாவட்டச் செயலாளர்கள் இருந்தபோது, வடக்கு மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபன் இருந்ததால், அவருக்கும் அங்கு ஆதரவாளர்கள் உண்டு. அவர்களை வைத்துக் கொண்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆசியில் வடக்கு மாவட்டத்தில் போட்டிக் குழுக்களை உருவாக்கி வருகிறார். இது அமைச்சர் சாமிநாதனுக்குத் தெரிந்தும், தெரியாததுபோல் நடந்துகொள்கிறார்.

ஆனால், திருப்பூர் வடக்கு மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியச் செயலாளர்களும் எம்.எல்.ஏ செல்வராஜின் ஆதரவாளர்கள். அதனால், அந்தப் பகுதியில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளுக்கும் அமைச்சர் தரப்பு அவர்களை அழைப்பதில்லை. மக்கள் பிரச்னை தொடர்பாகச் சென்றாலும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து விடுகிறார் அமைச்சர். வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகளையும் உடனடியாக இடமாற்றம் செய்யும் நடவடிக்கையிலும் அமைச்சர் தரப்பு தீவிரமாக இறங்கியிருக்கிறதாம்.

இல.பத்மநாபன்

அண்மையில் பொங்கலூரில் நடைபெற்ற பூமி பூஜையிலும்கூட வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், செல்வராஜ் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றனர். ஆனால், அமைச்சர் அடுத்த நாள் வேண்டுமென்றே அரசு அதிகாரிகளையும், தெற்கு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து வந்து அதே திட்டத்துக்கு போட்டி பூஜை போடுகிறார். வடக்கு மாவட்டப் பகுதிகளில் நடக்கும் திட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர் செல்வராஜையோ அல்லது ஒன்றியச் செயலாளர்களையோ அமைச்சர் கலந்தாலோசிப்பதுகூட இல்லை” என்றார்.

எம்.ஏல்.ஏ செல்வராஜ்

தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான செல்வராஜ், “எனக்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொங்கலூரில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்க வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவர் அழைத்ததால், முதல் நாள் நான் சென்றேன். அரசு நிர்வாகரீதியாக அழைத்ததால் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடுத்த நாள் அதே திட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் என்பதால் ஏற்கெனவே கட்சி நிகழ்ச்சிகளுக்கு வருவதாகக் கூறிவிடுவதால், அமைச்சருடன் செல்ல முடியாமல் போய்விடுகிறது. அமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால், நான் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறேன் அவ்வளவுதான்” என்றார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

இந்தப் பிரச்னைகள் குறித்துக் கேட்பதற்காக அமைச்சரைத் தொடர்பு கொண்டபோது, அவரின் உதவியாளர் செல்லமுத்து நம்மிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். சற்று நேரம் கழித்து நம்மை அழைத்த செல்லமுத்து, “ `மாவட்ட அமைச்சர் என்ற முறையில் வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்துத்தான் செல்கிறேன். வடக்கு மாவட்டத்திலுள்ள ஒன்றியச் செயலாளர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வருமாறு என்னை அணுகவில்லை. தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் இதற்கு முன்னர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்திருப்பதால், அவருக்கும் ஆதரவாளர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்தாலும், வடக்கு மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு இல.பத்மநாபனை அழைத்துச் செல்வதில்லை’ என்று அமைச்சர் சொல்லச் சொன்னார்” என்றார்.

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான இல.பத்மநாபனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், அவர் நம் இணைப்பில் வரவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதைப் பரீசிலித்து வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

from Tamilnadu News https://ift.tt/rBnHAdS