அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. அதன்படி மத்தியில் 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த புதிய வியூகங்கள் வகுத்து வருகின்றன. பிரிந்து கிடந்தால் பாஜக-வுக்கே சாதகமாக மாறும் என கருதிய எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு ஒருங்கிணைந்து போட்டியிடவும் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது. அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் என 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

லாலன் சிங்

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. இதுமட்டுமல்லாமல் இந்த கூட்டத்தில் நிதிஷ் குமாரின் மௌனம் பெரிதாக பேசப்பட்டது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷ்குமாரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. முதல் கூட்டத்தை ஒருங்கிணைத்தவரும் அவரே. ஆனால், தற்போது கூட்டணியை காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு போனது, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்ததாக சில தகவல்கள் வெளியானது.

எனினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலன் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், “எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்தவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர். அனைவரையும் ஒருங்கிணைத்தவர் கோபப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐந்து ஆண்டு காலம் நான் இருந்தேன். பிரதமர் மோடி ஒருநாளும் என்.டி.ஏ கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தற்போது ஏன் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். 2024 தேர்தலில் அவர்கள் தோல்வி அடைவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் – நிதிஷ் குமார்

இதற்கிடையே பெங்களூரு கூட்டத்தில் நிதிஷ் குமாரின் மௌனத்தை விமர்சித்து பேசியிருக்கும், பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறியிருக்கிறார்.

ஆனால் நிதிஷ் குமாரோ, தன் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனங்கள், யூகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தவர், “பாட்னாவில் கூடிய 15 பேரில் இருந்து, எண்ணிக்கை அதிகரித்து 26 பேராக கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம்.

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும். இது பாஜக-வுக்கு எதிரான கூட்டணி. அவர்கள் தங்கள் கட்சியில் 36 கட்சிகள் உள்ளதாக கூறுகின்றார்கள். அந்தக் கட்சிகளின் பெயர்களை கூற முடியுமா? தற்போதைய என்டிஏ கூட்டணி அடல் ஜி காலத்து கூட்டணி கிடையாது. இப்போது என்ன நடக்கிறது என்பதுதான் உங்களுக்கே தெரியும்” என்றவரிடம் `I.N.D.I.A கூட்டணிக்கு நீங்கள் ஒருங்கிணைப்பாளரா?’ என்கிற கேள்வி முன்வைத்த செய்தியாளர்களுக்கு, “மும்பையில் அடுத்த கூட்டத்தின் போது அது முடிவு செய்யப்படலாம்” என்றார்.

சுஷில் மோடி

தொடர்ந்து, பெங்களூருவில் பீகார் முதல்வருக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததால் வருத்தம் அடைந்துள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்.பி சுஷில் குமார் மோடி கூறியது குறித்த கேள்விக்கு, “பெங்களூருவில் சுஷில் மோடி இருந்தாரா?…” என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “I.N.D.I.A என்கிற புள்ளியில் ஒருங்கிணைப்பதற்கு தகுதியான இடத்தில் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், ஸ்டாலின் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் இமேஜ் உள்ள கட்சியை சேர்ந்த நபரை நியமித்தால்தான் I.N.D.I.A என்கிற கான்செப்ட் சரியாக இருக்கும். அதற்கு மம்தா, நிதிஷ் குமார் சரியானவர்களாக இருப்பார்கள். காங்கிரஸை பொறுத்தவரை சரத் பவார் இருந்தால் இவர்கள் இருவரை விட சிறப்பாக இருக்கும் என்கிற மனநிலை இருக்கிறது. அதனால் சரத் பவாருக்காக காத்திருக்கிறார்கள். சரத் பவாருக்கு இந்திய அளவில் ஒரு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அஜித் பவாருடன் சேர்ந்து பாஜக-வில் இணைந்தால் மகராஷ்டிராவில் ஏதும் செய்ய முடியாமல் போய்விட கூடும். இப்போது அங்கு சரத் பவர் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கிறார். ஆனால், நிதிஷ் குமாரை பொறுத்தவரை ஆர்.ஜே.டி மூலமாக அதிகாரத்தில் இருப்பார். பாஜக-வின் மூலமாகவும் அதிகாரத்தில் இருப்பார். ஆனால்அதிகாரத்தைவிட்டு போக மாட்டார்.

ரவீந்திரன் துரைசாமி

ஒரு வேளை காங்கிரஸ் மூலமாக அதிகாரம் கிடைக்கவில்லையென்றால், பாஜக மூலமாக அதிகார மையத்திற்குள் வரலாம். எனவே அதிகார மையத்துக்குள் வாங்க என்று பாஜக அழைத்தால் அங்கு சென்றுவிடுவார். அவர் அங்கு போகாமல் இருக்க வேண்டுமென்றால் அரசியல் நகர்வில், நிதிஷ் குமாருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தால்தான் தேசிய அளவில் நிற்பார். ஆனால், அவரை விட சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று சரத் பவாருக்காக காங்கிரஸ் காத்திருக்கிறார்கள். இதனாலேயே இப்போது காங்கிரஸ் நிதானிக்கிறார்கள்.

இவர்களின் அடுத்த கூட்டம் கூட மும்பையில் முடிவு செய்திருப்பதும் இதன் அங்கமாகவே பார்க்கலாம். I.N.D.I.A கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர், பிரதமர் வேட்பாளர் யார் என்கிற புள்ளியை நோக்கி நகர வேண்டிய இடத்திலும் இருக்கிறார்கள். இதுதான் அங்கு இப்போது சவாலானதாக இருக்கிறது” என்றார்.

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் பிரியன், “`என்னை ஒருங்கிணைப்பாளராக போடவில்லை என்றால் வருத்தம் கிடையாது. மோடியை ஒழிப்பதுதான் முக்கியமான வேலை. எல்லோரும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை’ என்று நிதிஷ் குமாரே சொல்லி இருக்கிறாரே. அவர் இல்லாமல் இந்த கூட்டணி அமையாது. ‘காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் மீது இஷ்டம் கிடையாது’ என்று கார்கே சொல்லி இருக்கிறார். அப்படி பார்க்கும் போது டீம் I.N.D.I.A-க்கு வாய்ப்பு கிடைத்தது என்றால், நிதிஷ் குமார் பிரதமராவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிதிஷ் குமார் விலகி செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவுதான்.

ப்ரியன், பத்திரிகையாளர்

நிதிஷ் குமார் கடந்த காலங்களில் அதிகாரத்தை மாறி மாறி பகிர்ந்து கொண்டிருந்தாலும், இனிமேல் பா.ஜ.க-வுடன் சேர்வதற்கான வாய்ப்பு குறைவு. இனி போனார் என்றால் அவர அரசியல் வாழ்க்கை அஸ்த்தமனமாகிவிடும். இப்போது மோடியை ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பாட்னாவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டமும் நடத்திவிட்டார். மோடி எதிர்ப்பிலும் ரொம்ப தூரம் கடந்து வந்துவிட்டார். எனவே இனிமேலும் மோடியுடன் கை குலுக்குவது என்பது நடக்காத ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன்.

எப்படி கெஜ்ரிவால் பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் இல்லாததை வைத்து சொன்னார்களோ, எப்படி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்காததை வைத்து சொன்னார்களோ அதேபோல் இப்போது நிதிஷ் குமார் மீதும் சொல்கிறார்கள். ஒரு பெரிய விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. கல்யாணத்தில் சீப்பை காணாம் என்பதை போல் பேசி கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போது நிதிஷ் குமார் மீது இவர்கள் வைக்கும் விமர்சனம் பெரிய விஷயம் கிடையாது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/vht37m4