விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அ.தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் பேசியவர், “விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசியானது, உயர்ந்திருக்கிறது. கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தி.மு.க அரசு எடுக்கவில்லை. தற்போது சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசின் கவனம் முழுவதும் டாஸ்மார்க் கடையின் பக்கம் தான் இருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் சரக்கின் விலை பாட்டிலுக்கு ரு.10 உயர்ந்திருக்கிறது. பாட்டிலுக்கு ரூ.10 வைத்து விற்றவர் தற்போது புழல் சிறையில் இருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு உண்டான வாய்ப்புகளும் தற்போது அதிமாக இருக்கிறது. அப்போதும் அ.தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும். ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுப்பதற்கு ஆயிரம் கண்டிஷன் போடுகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் ரோட்டுக்கு வந்தால் தான் உரிமை தொகை கிடைக்கும் என்ற நிலைதான் இருக்கிறது. தற்போது முள்ளூரில் திறக்கப்பட்டுள்ள துணைக்கோள் நகரத்தில் வீட்டுமனைகள், வெளிப்படைத்தன்மையோடு மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “புதுக்கோட்டைக்கு வந்த சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும், மருத்துவத்துறை இணை இயக்குனரை பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் இதுதான் நிலை. அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தால், அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் சஸ்பெண்ட் செய்யும் நிலைதான் வரும்.

அன்னவாசல்தனியார் மன நல காப்பக விவகாரத்தில் இணை இயக்குநரையும், மருத்துவரையும் மட்டும் குறை சொல்வது சுகாதார அமைச்சரின் திறன் இல்லாததைக் காட்டுகிறது. இணை இயக்குநரை அவ்வளவு எளிதாக சஸ்பெண்ட் செய்ய முடியாது. முதலில் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் சரியில்லை என்றால் விசாரணை செய்து அதன் பிறகு சஸ்பெண்ட் செய்யலாம். இதில்,அமைச்சரை முன்னிலைப் படுத்துவதற்காகவே, இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/WtRcXHy