பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள், நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த சம்பவம் மே 4-ம் தேதியே நடந்து போலீஸார் வழக்கு பதிவுசெய்திருந்தும் கூட, நேற்று முன்தினம் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியப் பிறகே, இப்படியொரு இழிவான சம்பவம் வெளிச்சத்துக்கே வந்தது.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணக் கொடுமை

இத்தகைய சம்பவம் ஒன்று நடந்தது என்று தெரிந்தும்கூட போலீஸார் இவ்வளவு நாள் இதுபற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இப்படியிருக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இன்னொருபக்கம் உச்ச நீதிமன்றமும், `நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்களே தலையிட நேரும்’ என்று எச்சரித்திருக்கிறது.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை – குற்றவாளி கைது

இப்படியான நெருக்கடிக்கு மத்தியில் மோடி, `மணிப்பூர் சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப மாட்டார்கள்’ என முதல்முறையாக நேற்று வாய்திறந்தார். பின்னர் வீடியோ வைரலான அடுத்த நாளான நேற்றே, முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டதாக மணிப்பூர் போலீஸ் ட்விட்டரில் நேற்று அறிவித்தனர். இந்த நிலையில், சம்பவம் நடந்து இரண்டரை மாதங்களாகியும் இவ்வளவு நாளாக உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன், குற்றவாளிகள் கைதுசெய்யப்படாதது ஏன், என்று தௌபல் காவல்துறை கண்காணிப்பாளர் சச்சிதானந்தா தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய சச்சிதானந்தா, “ ஆதாரம் எதுவும் இல்லாததால் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சம்பவம் நடந்த அன்று ஒரு கும்பல், நோங்போக் செக்மாய் காவல் நிலையத்திலுள்ள ஆயுதங்களைக் கொள்ளையடிக்கச் சூழ்ந்தனர். அப்போது காவல் நிலையத்தைப் பாதுகாப்பதில் போலீஸார் மும்முரமாக இருந்தனர்” என்று தெரிவித்தார்.

இப்படியிருக்க பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர், “போலீஸார் தான் எங்களை அந்தக் கும்பலிடம் விட்டுச் சென்றனர்” என்று தனியார் ஊடகப் பேட்டியில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூர் போலீஸ்

எவ்வாறாக இருப்பினும், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவராமல், `கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம்’ என பா.ஜ.க அரசு இரட்டை வேடம் போடுவதும், பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு மாதங்களாக ஆதாரம் எதுவும் இல்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று போலீஸார் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

from Tamilnadu News https://ift.tt/ebyH6Dz