மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்துவருகிறது. ஆனால், மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி செல்லவில்லை. மேலும், மணிப்பூர் பிரச்னையைப் பற்றி அவர் பேசவும் இல்லை. தற்போது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது இந்த நிலையில், மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மணிப்பூர் போராட்டம்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ வெளியாகி, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சூழலில்தான், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அந்த நேரத்தில், அந்த வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அதன் அழுத்தம் காரணமாக நாடாளுமன்றத்துக்கு வெளியே அது குறித்து பேசினார் பிரதமர். அப்போது, அந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறிய பிரதமர், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தின் அவைகளில் பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு, பிரதமர் தயாராக இல்லை. அதனால் ஏற்பட்ட அமளி காரணமாக, அவை நடவடிக்கைகள் முடங்கின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன.

அனுராக் தாக்கூர்

இந்த நிலையில்தான், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாருங்கள் என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.

“மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசியலாக்காதீர்கள். அந்த சம்பவம் வலிமிகுந்தது. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்டாலும், அப்படிப்பட்ட சம்பவத்தைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இது குறித்து விவாதம் நடைபெற வேண்டும். அதில், அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டுமென்று விரும்புகிறோம். யாரும் விவாதத்தில் பங்கேற்காமல் இருக்கக்கூடாது. விவாதத்தில் பங்கேற்க வருமாறு இரு கரம் கூப்பி அழைக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் அனுராக் தாக்கூர்.

‘மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்.. வாருங்கள்’ என்று அவர் அழைப்பு விடுத்திருந்தால், அதில் பிரச்னை இல்லை. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டுமல்லாமல், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் அனுராக் தாக்கூர். இதுதான் பிரச்னை. அதற்கு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ப.சிதம்பரம்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்துங்கள். ஆனால், மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது. பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிலைமையுடன், மணிப்பூர் நிலைமையை எப்படி ஒப்பிட முடியும்? மத்திய அரசு திறமையற்றது. கேவலமான ஒப்பீடுகளின் திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும்போது, அது இரக்கமற்றதாகவும் கொடூரமானதாகவும் தெரிகிறது. மத்திய அரசு செயலற்று இருக்கிறது. மாநில அரசு கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார் ப.சிதம்பரம்.

மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடி இனத்தவருக்கும், பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி இனத்தினவருக்கும் இடையே மோதலும் வன்முறையும் நிகழ்கிறது. அது ஒரு இன மோதல். அது தனியாக விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க் கட்சிகளின் கருத்து. மேலும், மணிப்பூரில் ஏராளமான கிராமங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்துவந்து, ஒரு கும்பல் வன்கொடுமை செய்திருக்கிறது. இதுபோல நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்கே கூறுகிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இப்படியான கொடூரங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், அது பற்றி பிரதமர் வாய்திறக்க மறுக்கிறார். எனவேதான், இது பற்றி நாடாளுமன்றத்தில் அவர் பேச வேண்டும் என்கிறோம் என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். மணிப்பூர் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் பேச வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

‘தற்போது மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பேசச் சொல்லுங்கள்’ என்று மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை சபாநாயகர் ஆகிய இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எதிர்க் கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு பிரதமரிடமிருந்தோ, ஆளுங்கட்சியிடமிருந்தோ பதில் இல்லை. மாறாக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கலாம் வாருங்கள் என்கிறது ஆளும் தரப்பு.

மணிப்பூர் – மோடி

மணிப்பூர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினால், அது பா.ஜ.க-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால், வன்முறை தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்தும் ஏன் அமைதி திரும்பவில்லை.. முகாம்களில் இருக்கும் சுமார் 50,000 பேரின் நிலை என்ன.. அவர்கள் வீடு திரும்புவதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன.. பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. என ஏராளமான கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனவேதான், மணிப்பூர் பிரச்னையைப் பற்றி தனி விவாதம் நடத்தவோ, பிரதமர் பேசவோ ஆளும் தரப்பு முன்வரவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

from Tamilnadu News https://ift.tt/mwM4p9B