ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் அதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறது. இதற்கிடையில், கடந்த 21-ம் தேதி ஊர்க்காவல்படை, குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்கான இணை அமைச்சராகப் பொறுப்பிலிருந்த ராஜேந்திர குதா, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகும் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில், “நான் இல்லையென்றால் முதல்வர் அசோக் கெலாட் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்” என அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் ரெட் டைரி குறித்து ராஜேந்திர குதா பேசினார். இது ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தின், பூஜ்ஜிய நேரத்தின்போது ராஜேந்திர குதா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து சட்டசபையில் கூச்சல் குழப்பத்தை உருவாக்கினார்.
மேலும், ஒரு ரெட் டைரியை சட்டசபைக்குக் கொண்டு வந்து, அதில் முதல்வர் அசோக் கெலாட்டின் முறைகேடான நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன என `பகீர்’ கிளப்பினார். அதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜேந்திர குதாவை அடித்து, உதைத்து சட்டசபையிலிருந்து வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராஜஸ்தானில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று நான் 15 வினாடிகள் பேசியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டேன்.

பா.ஜ.க-வுடன் இணைந்து நான் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்… என்னிடம் இருக்கும் ரெட் டைரியில் சிலரின் மறுப்பக்கங்கள் இருக்கின்றன. இந்த டைரி தர்மேந்திர ரத்தோர் எழுதியது. முதல்வர் அசோக் கெலாட், அவரின் மகன் பெயர் அதில் இருக்கிறது. மேலும், நிதிப் பரிவர்த்தனைகள், 2 முதல் 5 கோடி ரூபாய் வரை எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள்கள் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த டைரி விவகாரம் தற்போது ராஜஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/vuPMim6
