புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் குர்மீத் சிங், “தேசிய கல்விக்கொள்கையில் இளங்கலைப் படிப்பை படிக்கும் மாணவர்கள் அவர்கள் விருப்பப்படும் நேரத்தில் வெளியேறலாம். மாணவர்கள் ஒரு வருடம் கழித்துப் படிப்பைவிட்டு வெளியேற விரும்பினால், சான்றிதழ் பெற அனுமதிக்கப்படுகிறது. பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள், தங்கள் விருப்பப்படி அல்லது வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சிறிது காலம் கழித்து கல்விப் படிப்பைத் தொடரலாம். அகாடெமிக் பேங்க் ஆஃப் கிரெடிட் (Academic Bank of Credits) போர்ட்டலில் (ஏ.பி.சி) கணக்கு உருவாக்க மாணவர்களை இந்தக் கல்விக்கொள்கை அனுமதித்திருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பில் துணைவேந்தர்

இந்த ஏ.பி.சி, மாணவர்களின் பாட விவரங்கள் மற்றும் தரம் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாகச் செயல்படும். ஒரு இடைவேளைக்குப் பிறகு கல்விக்குத் திரும்ப விரும்பும் ஒரு மாணவர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சேரும்போது அவர்கள் விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடரலாம். பல கல்வி நிறுவனங்கள் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் மாணவர் இடைநிலைக் கல்வியின்போது வேறு பாடத்தை மேற்கொள்ள விருப்பம் இருந்தால், அதைத் தொடரலாம். புதுச்சேரி பல்கலைக்கழகம், அதனுடன் இணைந்த கல்லூரிகள் ஏ.பி.சி போர்ட்டலை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியிருக்கின்றன. இது மாணவர் இடைநிற்றலை ஊக்குவிப்பதாக அமையாது.

மாணவர்களின் அறிவாற்றல், சமூக உணர்ச்சி மற்றும் உடல் திறன்களை வளர்ப்பதற்கு முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது. இது பல்வேறு பாடங்களை ஆராய மாணவர்களை ஊக்குவிக்கும். புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு சரியான விதத்தில் முக்கியத்துவம் அளிக்கிறது. இது எந்த மொழியையும் திணிக்கவில்லை, மேலும் மொழியைத் தேர்ந்தெடுக்க மாணவருக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது. இது இந்தியைத் திணிக்கும் முயற்சி என்பது உண்மையல்ல. தாய்மொழிக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தக் கொள்கை மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்கும் வாய்ப்பை வழங்குகிறது. தமிழ் மொழி மிகவும் பழைமையானது மற்றும் வளமானது, மொழியை நாம் வளர்க்க வேண்டும். வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த மொழிமீதும் வெறுப்பு ஏற்பட வாய்ப்பில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கையானது தொழிற்கல்வியை பொதுக்கல்வியுடன் ஒருங்கிணைக்கிறது.

அனைத்து துறைகளிலும் திறன்களை ஒருங்கிணைக்கிறது, தொழில்நுட்பம் மூலம் கற்றல், தொழில் முனைவு, தொடர்ச்சியான மதிப்பீடு, பிராந்திய மொழிகளில் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி மூலம் சோதனை கற்றல் ஆகியவற்றுக்கு உதவுகிறது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கேட்கிறீர்கள். பல படிப்புகளில் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. பாடப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படவில்லை. உண்மையில், உள்ளூர் மாணவர்களின் பிரதிநிதித்துவம் 35% முதல் 40% வரை உள்ளது. எனவே 25% என்று கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்படியிருந்தாலும், உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சகத்திடம் எடுத்துச் சென்றிருக்கிறோம். அவர்கள் அதைப் பரிசீலித்து வருகின்றனர்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/wg0DqOd