மணிப்பூரில் நடந்துவரும் கலவரம் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கிடையே மறைமுகமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 4-வது நாளான இன்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியிருக்கின்றன. இதற்கிடையில், பா.ஜ.க-வின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “சரியான இலக்கு இல்லாத எதிர்க்கட்சிகளை நான் இப்போதுதான் பார்க்கிறேன். நிரந்தரமாக எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவதுபோல இருக்கிறது அவர்களின் செயல்பாடு.

மோடி

`இந்தியா’ என்று பெயர் சூட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கிந்திய கம்பெனி, இந்திய முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றிலும் `இந்தியா’ என்ற பெயர் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு `இந்தியா’ என்று பெயர் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறோம், பிரதமர் கிழக்கிந்தியக் கம்பெனி பற்றி பேசுகிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளித்தே ஆக வேண்டும். மணிப்பூரின் நிலைமையைக் குறிப்பிட்டு, சுமார் 50 உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நான்கு நாள்களாகத் தொடர் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றனர்” என்றார்.

பிரதமர் மோடி – மல்லிகார்ஜுன கார்கே

இதற்கு ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், “எந்தப் பெண் சித்ரவதை செய்யப்பட்டாலும் அது துரதிஷ்டவசமானதுதான். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்த தலைப்பில் விவாதிக்க பா.ஜ.க அரசு விரும்புகிறது. உள்துறை அமைச்சர் நிலைமையைத் தெளிவுபடுத்துவார். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்வியை மறைக்க விரும்புவதால், விவாதிக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உணர்வுபூர்வமான விஷயம். அதில் அரசியல் கூடாது.

எதிர்க்கட்சிகளுக்கு இது உணர்வுபூர்வமாக இருந்தால் உடனடியாக விவாதித்திருக்கலாம்” என எதிர்வினையாற்றியிருந்தார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயார் என நேற்றுக் கூறிய அமைச்சர் அமித் ஷா, “176-ன் விதியின்கீழ் குறுகிய கால விவாதத்துக்குத் தயார்” என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள், “சபையின் அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும் விதி 267-ன்கீழ் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.

பியூஷ் கோயல்

நாடாளுமன்றத்தில் இன்றும் தொடர்ந்த அமளியால் லோக் சபா, ராஜ்ய சபா என இரண்டு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையில், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

from Tamilnadu News https://ift.tt/L8FYplN