சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். இதில், 70-க்கும் மேற்பட்ட மா.செ-க்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் நிறைவு பெற்றப்பின்னர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யின் செயல்பாடு குறித்து, அவரை தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடன் ஒப்பிட்டு செய்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு, “அரசியல் வேறு, சினிமா வேறு. விஜய் அரசியலுக்கு வருகிறாரா, இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன் அதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. யாராக இருந்தாலும், கேப்டனைப்போல் நாம் என்று நினைத்தால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பதிலளித்திருந்தார் பிரேமலாதா.
இது நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. இதுதொடர்பாக விஜய்காந்த்-க்கு நெருக்கமான தே.மு.தி.க மா.செ.க்களிடம் பேசினோம். “விஜய் ரசிகர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். ஏனென்றால் பிரேமலதா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம். ஆனால், தனக்கு அரசியல் விருப்பம் இருப்பதை எந்த இடத்திலும் வெளிப்படையாக சொல்லவில்லை விஜய். அரசியலுக்கு தைரியம் ரொம்பவே முக்கியம். அது கேப்டனுக்கே உரியது.
கேப்டன் சிறுவனாக இருந்தபோது, தி.மு.க மதுரையில் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். வளரும்போதே அரசியலோடுதான் வளர்ந்தார். அவரின் தந்தை அழகர்சாமி, இரண்டு முறை மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்து, மூன்றாவது முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளருக்காக வேலைபார்த்து, தந்தையையே தோற்கடித்தவர்தான் கேட்பன்.
பின் சினிமாவுக்கு வந்தவர், ஈழப் பிரச்னைக்கு பிரபாகரனுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, தனது 100-வது படத்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ என்று பெயர் வைத்ததுடன், மூத்த மகனுக்கும் பிரபாகரன் என்றே பெயர் வைத்தார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார். தனது ரசிகர் மன்றத்துக்கு அவரே நிதி கொடுத்து மக்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செய்தார். கார்கில் போர் முதல் இந்தியாவில் எந்த மூலையில் பேரிடர் ஏற்பட்டாலும், முதல் ஆளாக நிவாரண நிதி கொடுப்பார். நடிகர் சங்கத்தின் மூலமாகவே, காவிரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்னைக்காக குரல் கொடுத்தார். 1996-ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு விழா எடுத்து தங்கப்பேனா பரிசளித்தார். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போதே, கட்சியை 2005-ல் தொடங்கினார். தனது படத்துக்கு பிரச்னை ஏற்படும்போது யாரிடமும் போய் கைக்கட்டியது இல்லை.

யாரோ சொல்லி கேப்டன் கட்சித்தொடங்கவில்லை. வெற்றிடம் வருமென்று காத்திருக்கவில்லை. தான் பேசுவது, செய்வதெல்லாம் அரசியலாக்கவேண்டுமென்று திட்டமிட்டு எதையுமே அவர் செய்ததில்லை. ஆனால், கேப்டனுக்கு நேர் எதிராக இருக்கக்கூடிய விஜய்யை, அவரோடு கம்பேர் செய்து சிலர் பேசுகிறார்கள். அதை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கட்சித்தொடங்கி தேர்தலை சந்திக்கும்போது, கேப்டன் சந்தித்த பிரச்னைகளில் ஒரு சதவிகிதத்தைக்கூட ஒரு சாதாரண மனிதரால் சமாளிக்க முடியாது. கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எங்களை எதிர்த்தது. அதைதான் பிரேமலதாவும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை அறிவுரையாக விஜய் தரப்பினர் எடுத்துக் கொள்ளவேண்டும்.” என்கிறார்கள் சூடாக…

பிரேமலதாவின் கருத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டோம்.
” உண்மையில் விஜய்-யின் ரோல் மாடல் விஜய்காந்த்-தான். அவரின் ரசிகர் மன்றங்களை போலதான், விஜய்யின் ரசிகர் மன்றம், எஸ்.வி.சந்திரசேகரால் உருவாக்கபட்டது. காவிரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட தமிழக உரிமை பறிபோகும்போது, நடிகர்களுடன் விஜய்யும் சில போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கிறார். சினிமா துறையின் இருக்கும் பிரச்னை குறித்து மோடியிடமே பேசிருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்துக்கே நேரில் சென்று நலம் விசாரித்து இருக்கிறார். ஏராளமான நலத்திட்டங்களை வெளியில் தெரியாமலேயே செய்து இருக்கிறார். இது போதாதா?…” என்று நம்மிடம் திரும்பி கேள்விக் கேட்டனர்.
from Tamilnadu News https://ift.tt/wt2Gnhq
