புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கின்றன. வேறு எந்த சிறப்பு வசதிகளும், சலுகையும் அவருக்கு வழங்கவில்லை. கேன்டீனில் உணவு வாங்கிச் சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏ.சி வசதியெல்லாம் செய்து தரப்படமாட்டாது. அதை முதலமைச்சரும் அனுமதிக்க மாட்டார்.

கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லிக்குச் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளைக் கூறியிருக்கிறார். நீர்வளத்துறை மூலம் சட்டரீதியாக எதைச்செய்ய வேண்டுமோ அதை அவர் செய்வார்.

அமைச்சர் ரகுபதி

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவது தொடர்பான கேள்வியே எழவில்லை. முதலமைச்சர் அறிவுறுத்தியபடி நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் நேரில் சந்தித்து, அவருடைய சார்பிலும், சட்டத்துறை சார்பிலும் கடிதம் கொடுத்தேன்.

அதற்கு, `தற்போது என்ன நிலைமை இருக்கிறதோ, அதோ நீடிக்கும். அம்பேத்கர் படத்தை அகற்றப் போவதில்லை, இருக்கக்கூடியது இருக்கட்டும். இதை வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறோம். அரசுக்கும் உறுதி தருகிறோம். இந்த முடிவை முதலமைச்சரிடம் சொல்லுங்கள்’ என்று நீதியரசர் கூறினார்.

புதுக்கோட்டையில் கடந்த 5 நாள்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிரச்னைக்குத் தீர்வு காண புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பொறுப்பு நீதியரசர்கள் தலையிட்டு, தீர்வு காண்பார்கள். அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தீர்வு காணப்படும்” என்றார்.

விலைவாசி குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிட்ட சதவிகிதம் விலைவாசி உயர்வது இயல்புதான். ஆனாலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்து வருகிறோம்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

இன்றைக்கு பதுக்கல் போன்றவற்றில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விலைவாசி உயர்வை விரைவிலேயே முதலமைச்சர் கட்டுப்படுத்துவார். கொடநாடு வழக்குக்காகப் போராட்டம் நடத்துபவர்கள் நடத்தட்டும். கொடநாடு வழக்கில் யார், யார் எல்லாம் தவறு செய்தார்களோ, அவர்கள் சட்டத்தின் முன்பு கட்டாயம் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர்களால் தப்பிக்க முடியாது.

ஜெயலலிதா வழக்கில் அவரது உடமைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ… அவர்களிடம்தான் அவரின் உடமைகள் கொடுக்கப்படும். அதைத்தவிர்த்து வேறு எவரிடமும் ஒப்படைக்க எங்களுக்கு அனுமதி இல்லை” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Vxtg9vR