சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், 10 நாட்களில் தனியார் மருத்துவமனையில் இருந்து சிறையில் சேர்க்கப்பட வேண்டும் என கடந்த ஜூலை 4-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க ஏற்கனவே வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கடந்த ஜூலை 15ம் தேதி பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வை அமைக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் போலீஸ் காவல் குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் தெரிவித்து இந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் பேசினோம். “இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இந்த தீர்ப்பு வந்துள்ளது. மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமலாக்கத்துறை எப்போதிலிருந்து காவலில் எடுக்கும் என்பதை அமர்வு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார். மூன்றாவது நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. எனவே அதன் காரணமாகவே அமலாக்கத் துறை காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாங்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்று முதல் மீண்டும் இரு தரப்பு வாய் மொழி வாதங்களும் தொடங்கும். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் எப்போதும் ஜாமீன் கேட்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்திலும் அந்த கோரிக்கையை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் நாங்கள் இந்த கைது சட்டவிரோதமானது என்கிறோம். கைது சட்டவிரோதமெனில் நீதிமன்ற காவல் இயந்திரத்தனமானதாக மாறிவிடுகிறது.
ED காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதை நாங்கள் விவாதிக்கவில்லை. ED தங்கள் அதிகாரம் குறித்து வாதிட்டதன் காரணமாகவே அந்த வாதங்களை முன் வைத்தோம். எனவே நான் மேற்கூறியவற்றை மையமாக வைத்தே, உச்ச நீதிமன்றத்தில் எங்கள் விவாதம் இருக்கும். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.” என்றார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் பேசினோம். “தற்போதைய நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை அதை சாதகம் பாதகம் என எளிமையாக வகைப்படுத்த முடியாது. அதே நேரம் அதில் எங்களுக்கு சாதகமான சில அம்சங்கள் உள்ளன. உதாரணமாக ஒரு வேளை உயர் நீதிமன்றமே அமலாக்கத்துறை எப்போதிலிருந்து காவலில் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தால் நிச்சயமாக செந்தில் பாலாஜி தரப்பினர் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பார்கள். எனவே இந்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் காவல் குறித்த முடிவே இறுதியான ஒன்றாக இருக்கும்.
அதே நேரம் ஆட்கொணர்வு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பது எங்கள் தரப்புக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. வாதங்களை பொறுத்தவரை துஷார் மேத்தா உயர் நீதிமன்றத்தில் கைது சட்டவிரோதமானது அல்ல. EDக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. ஆகியவற்றை முன் வைத்தார். அதேபோன்ற வாதங்கள் தான் உச்ச நீதிமன்றத்திலும் தொடரும்” என்றார்
from Tamilnadu News https://ift.tt/kydAulO
