மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்துக்கும், பழங்குடியின குக்கி சமூகத்துக்கும் இடையே கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகக் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. கலவரம் நடக்கத் தொடங்கியச் சமயத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருந்த பா.ஜ.க அரசு, இதுநாள் வரையில் இன்னும் கலவரத்தைக் கட்டுப்படுத்தவில்லை.

மணிப்பூர் வன்முறை – பாஜக

இவ்வாறிருக்க, பழங்குடிப் பெண்கள் இருவர், நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானது தொடர்பாகக் கடந்த வாரம் வெளியான வீடியோ, நாட்டையே கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பின்னர் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில், மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூறியது. எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்து நேற்றுவரை மணிப்பூர் பற்றி விவாதமே நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு, மக்களவை பொதுச்செயலாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் அளித்திருக்கிறார்.

பா.ஜ.க – காங்கிரஸ்

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மான சரியாக இருக்கும் பட்சத்தில், மக்களவையில் சபாநாயகர் அதனை வாசிப்பார். அதோடு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவான எம்.பி-க்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகரால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அதேமயம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி-க்களாவது ஆதரவு தெரிவித்தால் தான், சபாநாயகர் அதனை வாக்கெடுப்புக்கு உட்படுத்துவார். அவ்வாறு குறைந்தபட்சம் 50 எம்.பி-க்களின் ஆதரவு கிடைத்த பிறகு, வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி தன் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சியிலிருக்கும் அரசு பதவி விலக நேரும்.

from Tamilnadu News https://ift.tt/8VEwdCT