மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதுதான், நிர்பயா சம்பவம் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, தலைநகர் டெல்லியில் ஒரு பேருந்தில் வைத்து 23 வயது பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அந்தப் பெண் சில நாள்களில் உயிரிழந்தார்.

பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண் யார்… என்ன என பின்னணி வெளியிடப்படாத நிலையில், அவருக்கு நிர்பயா என்று ஊடகங்கள் பெயரிட்டன. நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த அந்தக் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. வெளிநாடுகளிலிருந்தும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, மணிப்பூரில் வன்முறை கும்பலால் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஜூலை 19-ம் தேதி வெளியானது. அந்தப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்துவந்த நிலையில், அது குறித்து வாய்திறக்காத பிரதமர் மோடியே, இந்த வீடியோ வெளிவந்த பிறகுதான் மணிப்பூர் பற்றி வாய்திறந்தார்.

பாலியல் வன்கொடுமை

என்னதான் கண்டனங்கள் எழுந்தாலும், அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டாலும் பெரியளவில் போராட்டங்கள் நடக்கவில்லை. சில அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும்தான் போராட்டம் நடத்தினார்கள். மற்றபடி, நிர்பயா சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களைப்போல இப்போது போராட்டங்கள் நடைபெறவில்லை.

நிர்பயா சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 2014-ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான், பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய மோடி, ‘நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது, நிர்பயாவை நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார். டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மோடி அப்போது விமர்சித்தார்.

நிர்பயா

2014-ல் மோடி வெற்றிபெற்று பிரதமராகிவிட்டார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக, கத்துவாவில் எட்டு வயதான சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்ட கொடூரம் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.

அதை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. அதே நேரத்தில், அந்தச் சம்பவத்தை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை என்றும், அது பற்றி அவர் பேசவே இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது, மோடியின் ஆட்சியில்தான், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதையெல்லாம் தற்போது எதிர்க்கட்சிகள் ஊடக விவாதங்களில் மோடி அரசுக்கு எதிராகப் பேசிவருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை

நிர்பயா சம்பவத்தையும், மணிப்பூர் சம்பவத்தையும் குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சி ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டபோது, அதை மிகப்பெரிய அளவுக்கு அரசியலாக்கிய பா.ஜ.க., தற்போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூற்றுப்படி நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மணிப்பூரில் நடைபெற்றும், மௌனம் காப்பது ஏன் என்கிற கேள்வியை காங்கிரஸார் எழுப்புகிறார்கள். இன்றைக்கு, மணிப்பூர் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்ற குற்றச்சாட்டையும் பா.ஜ.க-வினர் முன்வைக்கிறார்கள்.

from Tamilnadu News https://ift.tt/SPI8q16