பாரம்பர்யமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைப் படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இப்படிப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தில்தான் சத்தமே இல்லாமல் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. முதுநிலை சமூகவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் துறை சார்பில், சமீபத்தில் ஒப்புதல் படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், `நான் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கமாட்டேன். முன் அனுமதியின்றி நீண்டகால விடுப்பு, வகுப்புக்கு வராமல் இருக்கமாட்டேன்’ ஆகியவைக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் இந்த விதிகளை மீறினால், துறைத்தலைவர் தங்களை உடனே படிப்பிலிருந்து நீக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையாகியிருக்கிறது.

சென்னை பல்கலைக்கழக கடிதம்

இதற்கு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், “சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறையில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ படிக்கும் மாணவர்கள் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற அறிவிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்தச் சுற்றறிக்கை உயர்கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக இருப்பதால், அதைப் பல்கலைக்கழகத்தின் உள்விவகாரமாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் அம்சங்களாக விவாதம், விமர்சனம் ஆகியவை இருக்க வேண்டும்.

அறிவுள்ள குடிமக்கள் இருந்தால் மட்டுமே ஜனநாயகம் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பில் ‘இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு’ என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவின்படி, அனைத்து குடிமக்களுக்கும் ​​பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூடுவது, சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு. அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு, கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சிக்க சட்டபூர்வ உரிமை இருக்கிறது. மேலும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் விமர்சனத்திற்குரியவை. பல்கலைக்கழகம் மாணவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதுடன், அவர்கள் கற்றலுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகமோ அல்லது குறிப்பிட்ட துறையோ மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், மாணவர்களுக்குப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான முழு உரிமையும் உள்ளது. அவர்களின் பிரதிநிதித்துவங்கள் கவனிக்கப்படாவிட்டால், அவர்களின் உண்மையான கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

சென்னை பல்கலைக்கழகம்

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். மாறாக, கண்ணியமான வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு மாணவர்களை அவமானப்படுத்தக் கூடாது. இரண்டாம் ஆண்டு எம்.ஏ., சமூகவியல்துறை மாணவர்கள் கையெழுத்திட வேண்டிய உறுதிமொழிப் படிவம் சர்.சி.வி.ராமனை நேரடியாக அவமதிக்கும் வகையில் உள்ளது. சர்.சி.வி.ராமன் அன்றைய அரசின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். சமூகவியல்துறைத் தலைவரை, மாணவர்கள் தங்கள் கல்விச் சுதந்திரம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்திருக்கும் உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மாணவர்களிடமிருந்து அத்தகைய உறுதிமொழிகள் பெறப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, “ஒரு பலமான நிர்வாகம் மாணவர்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும். மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கத்தான் வருகிறார்கள். போராடவா வருகிறார்கள்… படிக்க வரும் மாணவர்கள் ஏன் போராட வேண்டும். கடந்த மே நான்காம் தேதி சுத்திகரிப்பு நீர் தொட்டி வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அது முப்பது நாள்கள் கழித்து நிறைவேறியிருக்கிறது. அதோடு வைக்கப்பட்ட கோரிக்கைகள் எத்தனை நிறைவேறி இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நிரந்திர ஆசிரியர்கள் நியமனங்கள் முதற்கொண்டு வலுவிழந்த கட்டமைப்புகள் வரை உள்ள சிக்கல்களால்தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் நிர்வாகம் பலவீனமக இருப்பதால், அவர்களின் குறைகளைச் சொல்லக்கூடிய மாணவர்களைப் பழிவாங்கி, அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

அதோடு, மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கினால் அது நிர்வாகத்தின் வெற்றி என்று நினைக்கும் மனநிலை தவறானது. மாணவர்களை அடக்கினால் அது வேறு விதமாகத்தான் வெளிப்படுமே தவிர, பிரச்னையைத் தீர்க்காது. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜனநாயகரீதியாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்னைகள் சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டுமில்லை. எல்லா பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இது போன்ற பிரச்னைகள் ஒரு சில மாணவர்களின் தீவிரத்தன்மையினால், தொடர் முயற்சியினால் சில நேரங்களில் வெளிப்படுகின்றன. பல இடங்களில் மாணவர்கள் ஒடுக்கப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாகி அவர்களுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய ஆசிரியர்களும் பழிவாங்கப்படுகின்றனர். இதற்கு மாணவர்களின் போராட்டங்கள் மட்டுமின்றி, ‘இது என்னுடைய பல்கலைக்கழகம்… என்னுடைய கல்லூரி…’ என சமூகமும் எழுந்து நிற்க வேண்டும்” என்றார்.

ஏன் இந்த தீடீர் கடிதம்… என்ன நடக்கிறது சென்னை பல்கலைக்கழகத்தில் என்பது குறித்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசினோம். நம்மிடம் பேசிய மாணவர்கள், “கல்லூரியில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தச் சொல்லி கடந்த மே மாதம் போராட்டம் நடத்தினோம். அதை எம்.ஏ சோசியாலஜி மாணவர்கள் முன்னெடுத்தோம். அப்போது முதலாமாண்டு படித்த நாங்கள், இப்போது இரண்டாமாண்டில் பயில்கிறோம். நாங்கள் வைத்த கோரிக்கையில் ஆர்.ஓ வாட்டர் டேங்க் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு மாதம் கழித்துதான்.

சென்னை பல்கலைக்கழகம்

விரைவில் பல்கலைக்கழகத்துக்கு டெல்லியிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கான தரச்சான்று கொடுக்கும் குழுவினர் வரவிருக்கிறார்கள். அடுத்து குடியரசுத் தலைவரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அந்த நேரத்தில் எங்கு நாங்கள் போராட்டம் ஏதும் நடத்திவிடுவோமோ என்ற பயத்தில் அதை முன்கூட்டியே தடுக்கும் நோக்கத்தில்தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் சில நேரங்களில் எங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதில் ஏதும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். இப்போது கொடுத்திருக்கும் கடிதம் மூலம் எங்களை மட்டுமல்ல, எங்களின் பெற்றோர்களையும் தேவையின்றி பதற்றமடைய வைக்கிறார்கள்” என்றனர்.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரியிடம் விளக்கம் கேட்டபோது, “பல்கலைக்கழகத்துக்கென சில ஒழுங்கு விதிமுறைகள் இருக்கின்றன. அதில் தர்ணா, போராட்டம் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினாலே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது விட்டுவிட்டோம். சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், ‘எதற்காக போராட்டம்… அதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?’ என அரசு தரப்பில் கேட்டபோது, அதற்கான விளக்கமும் கொடுத்தோம். முதலமாண்டில் புதிதாக வருபவர்களுக்கு விதிமுறைகள் தெரியாமல் இருக்கும் என்கிற காரணத்தால், அவர்களுக்கு தெரிவுப்படுத்தவே இந்த அறிக்கை.

துணைவேந்தர் கௌரி

இதற்கு முன்பு முதுநிலை சமூகவியல் மாணவர்கள் போராட்டம் செய்ததால், அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற துறைகளிலும் இதுபோல நடந்தால், விதிமுறைகளை அவர்களுக்கும் தெரியவைப்போம். இதில் பெற்றோர்கள் கையெழுத்து போடுவதும், போடாததும் அவர்கள் விருப்பம். நியாயமான கோரிக்கையாக இருந்தால் போராட வேண்டாமே. நேரடியாக ஹெச்.ஓ.டி-யிடம் சொல்லலாமே?” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/SjeUYI4