நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான ப.சிதம்பரம், “மணிப்பூர் விவகாரத்தில் என்னென்ன கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டன என்பது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் தகவல் (Prism) தரவைக் கேட்டேன்.

ஜகதீப் தன்கர்

அதற்கு அவர்கள் அளித்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, 20-ம் தேதியிலிருந்து நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்புவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை… ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் மணிப்பூர் விவகாரம். ஆளும் அரசும், சபாநாயகரும் இணைந்து ஏற்படுத்திய இந்த நாடாளுமன்ற ஆய்வுக் கூடம் அளித்த பதில் இன்னும் என்னை அதிர்ச்சியிலிருந்து மீட்கவில்லை” எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கர், “பல எதிர்க்கட்சி எம்.பி-க்கள் விவாதிக்கப் பட்டியலிடப்பட்ட கேள்விகளைக் கேட்கும்போது, மணிப்பூர் பிரச்னையையும் எழுப்ப முயன்றனர். உறுப்பினர்கள் தாங்கள் பட்டியலிட்ட கேள்விகள் மற்றும் தொடர்புடைய துணைக்கேள்விகளுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், அதிருப்தியடைந்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்னையில் விதி 176-ன்கீழ் குறுகிய கால விவாதத்துக்கான அறிவிப்புகளை நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டேன்.

பியூஷ் கோயல்

விவாதத்துக்கு அரசின் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, நாடாளுமன்ற கவுன்சில் தலைவருடன் விவாதித்த பிறகு, குறுகிய கால விவாதத்துக்கான தேதி மற்றும் நேரத்தை நிர்ணயிப்பேன். மேலும், நான் இன்று ஒன்றை கவனிக்க நேர்ந்தது. கேள்வி எண், உறுப்பினரின் பெயரை நான் வாசித்தேன். ஆனால் அவர்கள் தங்கள் கேள்வியில் கவனம் செலுத்தாமல், அத்துமீறலில் இறங்கினர். இதை எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சபைத் தலைவரைக் குறிவைத்து கேள்வி எழுப்பியது துரதிஷ்டவசமான சூழ்நிலை. எனவே சபாநாயகரை அவமானப்படுத்திய ப.சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடாளுமன்ற உறுப்பினர் மற்ற உறுப்பினர்களை தோகேபாஸ் (ஏமாற்றுபவர்) என்று அழைப்பதைக் கேட்டு நான் வியப்படைகிறேன். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை நான் கண்டிக்கிறேன்” எனக் கடுமையாகச் சாடினார்.

from Tamilnadu News https://ift.tt/fKrhHNd