“மணிப்பூர் கலவரம் குறித்துப் பிரதமர் பேசவில்லை என்றீர்கள்… இப்போது பேசிவிட்டாரே?”

“பிரதமர் மோடி எப்போது வாயைத் திறந்தார் என்பதைப் பார்க்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தைத் தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், நாங்கள் தலையிடுவோம் என்று சொன்னவுடன், 30 விநாடிகள் பேசினார். அதுவும் என்ன பேசினார்… `சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என சத்யராஜ் பட டயலாக்கைச் சொன்னார். அதைச் சொல்வதற்கு காவல் ஆய்வாளர் போதாதா… பிரதமர் எதற்கு?”

பிரதமர் மோடி

“பிரதமர் வேறென்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?”

“ `இரு தரப்பு மக்களும் வன்முறையைக் கைவிடுங்கள்’ என பிரதமர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டாமா… வன்முறை வேண்டாம் என்றுகூட பிரதமர் வாயிலிருந்து வரவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது.”

“மைதேயி  இனத்தினரை, பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதுதான் பிரச்னையா… பின்னணி என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

“ `எங்களை அந்தப் பட்டியலில் சேருங்கள், இந்தப் பட்டியலிலிருந்து நீக்குங்கள்’ என்ற பிரச்னை எல்லா மாநிலங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தகைய விவகாரங்களில் அரசாங்கம்தான் ஒரு சமநிலையைப் பேணி, பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அதை வன்முறை வரை இழுத்துச் சென்றது யார்… வன்முறை வெடித்த பிறகு 80 நாள்கள் ஆகியும் நடத்திக்கொண்டேயிருப்பது யார்… ஆயுதக்கிடங்கிலிருந்து ஆயுதங்களைத் திருடி, வன்முறைக் கும்பலுக்குக் கொடுத்தது யார்… காடுகளுக்குள் பதுங்கியிருந்த பெண்களை வன்முறைக் கும்பலிடம் பிடித்துக் கொடுத்தது யார்… அரசாங்கமே கலவரத்தைத் தூண்டினால்தான் இதெல்லாம் நடக்கும்.”

“ஆனால், நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பா.ஜ.க அரசு பணிந்ததாகத் தெரியவில்லையே?”

“எதிர்க்கட்சிகளே இல்லாத ஆட்சியையும், நாட்டையும் அமைக்க வேண்டுமென்பது பா.ஜ.க-வின் கொள்கை. அவர்கள் எப்படிப் பணிவார்கள்… மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்.”

“ராகுல் காந்தியின் பாரத் ஜோடோவைப்போல அண்ணாமலையும். `என் மண், என் மக்கள்’ என நடைப்பயணம் தொடங்கப்போகிறாரே?”

“டி.வி., கேமராக்களை வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதற்கான ஒரு யாத்திரையாகத்தான் அது இருக்கும். தான் ஒரு ‘சிங்கிள் மேன் ஆர்மி’ என்று இதன் மூலம் காட்டிக்கொள்ளலாம் என நினைத்துச் செய்யலாம். அது அவர்கள் வழக்கமாகச் செய்வதுதான். அதனால் மக்களுக்கு ஒரு பெரிய தாக்கமாகத் தெரியாது.”

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

“ராகுல் காந்தியின் பயணமும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதானே பா.ஜ.க சொல்கிறது?”

“குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட பயணத்தோடு, அண்ணாமலையின் பயணத்தை ஒப்பிடுவதே தவறானது. அவர்களைப்போல நாங்கள் வெறுப்புணர்வை பரப்பவில்லை. சகிப்புத்தன்மையைப் பரப்புகிறோம். அதனால்தான் கர்நாடகாவில் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் ராகுல் காந்தியோடு கரம் கோத்து நடந்தனர். பா.ஜ.க ஆட்சியில் பதற்றத்திலேயே இருக்கும் காஷ்மீரில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்குப் பிறகு சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது. கர்நாடகா தேர்தல் வெற்றியிலும் ராகுலின் நடைப்பயணத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது.”

“அப்படியானால் அண்ணாமலையின் பயணமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா?”

“தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க-வினர் சொல்லலாம். தாக்கம் ஏற்படுகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பா.ஜ.க-வை எதிர்க்கும் வலிமையான சித்தாந்தம் எங்களிடம் இருக்கிறது. அதனால் அதைப் பற்றிக் கவலையில்லை.”

ராகுல் காந்தி

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் வியூகங்களுக்கு எதிராக நீங்கள் எதை முன்வைக்கப்போகிறீர்கள்?”

“ஓய்வூதியத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்படவில்லை. பொது விநியோகத் திட்டமும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும்கூட அப்படித்தான் இருக்கின்றன. காங்கிரஸ் உருவாக்கிய இந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை என்பதால், வடமாநிலங்களில் மக்களிடையே ஏற்கெனவே அதிருப்தி இருக்கிறது. இதை முன்னெடுத்து வாழ்வியல் பிரச்னைகளை விரிவாகப் பேசுவோம்.”

“சரி, ராகுல் காந்திக்கு சட்டரீதியாக வாய்ப்பு இல்லையென்றால் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்துமா?”

“ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். இந்தியாவின் எதிர்காலத்தைப் புரிந்துகொண்டிருப்பவர் அவர். மக்களை மதிக்கத் தெரிந்தவர். கூட்டணிக்குள்ளும் ராகுல் காந்தியை 100% விரும்புகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல சட்டரீதியாக ராகுல் காந்திக்குத் தடையை நிலைநிறுத்த எல்லா வழிகளிலும் முயல்வார்கள். ஒருவேளை அப்படி நடந்தால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, கூட்டணி கூடி முடிவுசெய்யும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”

from Tamilnadu News https://ift.tt/JQksoMN