கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில்…

`சர்க்காருக்கு நிலம் கொடுத்தார், சந்தியில் நிற்கிறார்… நெஞ்சு வெடிக்கும் நெய்வேலி சோகம்!’ என்ற தலைப்பில் 10-11-2007 அன்று பசுமை விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டோம்….

அதை மீண்டும் இப்போது பகிர்வது பொருத்தமாக இருக்கும்…

கண்ணில் அவ்வளவு எளிதில் அகப்பட்டுவிடாத குக்கிராமம்… சுற்றிலும் முந்திரிக் காடு… அதன் நடுவே மேற்கூரை மட்டும் வேயப்பட்ட அந்த வீடு… சுற்றுச் சுவர் என்று எதுவும் கிடையாது… சாக்குகள் மறைத்து நிற்பதுதான் சமையலறை… மின்சார இணைப்பே இல்லை என்பதால், இன்றைய நவீன வசதிகள் எதுவும் எட்டிப் பார்க்கவில்லை… வறுமையின் கோரக்காட்சி அப்பட்டமாக ஆட்டம் போட்டுக்கொண்டி ருக்கும் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்… பட்டுச்சாமி.

இந்தியா, குடியரசாக பரிணாமமெடுத்த 1950-ம் ஆண்டில் பெருமத்தூரின் மணியக்காரராக ஊரே கை எடுத்துக் கும்பிடும் மரியாதைக்குரிய மனிதராக 95 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராக வலம் வந்த ரெத்தினம் படையாச்சியின் இளைய வாரிசுதான் இந்த பட்டுச்சாமி

 ஐம்பது ஆண்டுகளில் இந்தக் குடும்பம் இப்படியொரு கதிக்கு ஆளானதுக்கு என்ன காரணம்…?

 ‘தொழிற்சாலைகள் மற்றும் அரசு சார்ந்த பொது நிறுவனங்களுக்காக நிலங்களைக் கொடுப்போருக்கு குடியிருக்க மாற்று இடம், மாற்று நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, தொழிற்சாலைக்கு நிலத்தைக் கொடுத்திருந்தால் அதன் கட்டுமான வேலைகளில் பணி, குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரம், குடிநீர், சாலைகள்’ என்று அரசுத் தரப்பில் எடுத்துவிடப்படும் சலுகைகளை நம்பி 95 ஏக்கர் நிலத்தை விட்டு வெளியேறியதுதான் ஒரே காரணம்.

 காலச்சக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாமா…?

நெய்வேலி அனல் மின்நிலையம்

இன்றைக்கு நெய்வேலி டவுன்ஷிப் என்று படாடோபமாக நிற்கிறதே நிலக்கரி நகரம். அதன் பழையபெயர்தான் பெருமத்தூர். 1950-களில் ஒரு ஊருக்குரிய அத்தனை இலக்கணங்களுடன் பண்ருட்டி அருகே நின்றிருந்தது இந்த பெருமத்தூர். சின்னச் சின்னதாக பதினோரு உட்கிராமங்கள்; மக்கள் வழிபட சிவன், பிள்ளையார், அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் என எல்லா சாமிகளுக்கும் கோயில்; கும்பிட வேறு வேறு சாமிகளானாலும் குளிப்பதற்கு ஒரேயரு பொதுக் குளம்தான். சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், 14 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது அந்த குண்டான்குளம். ஊரின் பரப்பு 2572.25 ஏக்கர். அவ்வளவும் பொன் விளையும் பூமி. நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், புகையிலை, கடலை, உளுந்து என அள்ளக் குறையாத விளைச்சல். மா, பலா, முந்திரி என மரப்பயிர்களிலும் பணமழைதான்!

ஊரிலேயே பெரிய குடும்பம், ரெத்தினம் படையாச்சியின் குடும்பம்தான். ஊர் மணியக்காரரான அவரின் வீட்டுக்கு மட்டும்தான் சுதேசமித்திரன், தினமணி ஆகிய செய்தித்தாள்கள் வரும். சுத்துப்பட்டு பதினோரு கிராமங்களின் வம்பு, சண்டைகள் இவர் வீட்டில்தான் பைசல் செய்யப்படும். மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான ரெத்தினம் படையாச்சி, திடீரென இறந்துவிட, குடும்பம் தவிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தச் சூழலில், ஊரின் மேற்கே புதிதாக ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் நிலக்கரி நிறுவனம், பெருமத்தூர் கிராம எல்லை வரையிலான நிலங்களை வளைத்துவிட்டது. அடுத்தடுத்த ஊர்களைச் சேர்ந்தவர்கள், ‘எந்த நேரமும் நம்ம ஊரை காலி பண்ணிடுவாங்க’ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்க… பெருமத்தூர் மட்டும் மிக தைரியமாக இருக்கிறது. ‘‘நம்ம ஊருதான் காங்கிரஸ்காரங்க நெறைஞ்ச ஊராச்சே. இங்கெல்லாம் நிலத்தைக் கேட்டு யாரும் வரமாட்டாங்க… அப்படியே வந்தாலும் முதல்வர் காமராஜர்கிட்டேயே சொல்லி ஊரைக் காப்பாத்திடலாம்’ என்று நம்பிக்கையோடு இருந்தார்கள் மக்கள்.

இந்த ஊரை ஆய்வு செய்த நிபுணர் குழுவும், அதற்குத் தகுந்தாற்போல இங்கே நிலக்கரி இல்லை என்று உறுதியாகச் சொல்ல, மக்களின் தைரியம் கூடியது. ஆனால், அது ரொம்ப நாள் நிலைக்க வில்லை. 1954-ம் ஆண்டு, ‘ஊருக்குள் இனிமேல் யாரும் புதிதாக வீடு கட்டக்கூடாது. இருக்கும் வீடுகளையும் விஸ்தரிக்ககூடாது’ என்று அரசாங்கம் அறிவிப்புக் கொடுக்க, ஊரே இழவு விழுந்தது போல ஆகிவிட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று ஊர்க்காரர்கள் அலைந்து திரிந்தும் பிரயோஜனமில்லை.

குடும்பத்தினருடன்…

‘கல்வீட்டில் உள்ளவர்களுக்கு பத்து சென்ட் நிலம், கூரை வீட்டில் வசிப்பவர்களுக்கு 5 சென்ட் நிலம், விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 250 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு, இரண்டு ஏக்கர் நிலம், எல்லோருக்கும் நிறுவனத்தில் வேலை’ என்று அப்போதைய கலெக்டர் உத்தண்டராமன் தலைமையில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் முடிவானது.

ரெத்தினம் படையாச்சியின் குடும்பத்துக்கு ரொம்பவே இழப்பு. கையிலிருந்தது மொத்தம் 95 ஏக்கர். அதில் 45 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மட்டும்தான் இழப்பீடு. தரிசாக விட்டிருந்த 50 ஏக்கரை இழப்பீடு கொடுக்காமலே கையகப்படுத்திவிட்டனர். கணவன் இறந்து விட்ட நிலையில், சொத்துக்களும் இப்படி அநியாயமாக பறிபோக, இழப்பீடாக கிடைத்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் ஊரைவிட்டு வெளியேறிவிட்டார் ரெத்தினம் படையாச்சியின் மனைவி மங்களம்பாள்.

இன்றைக்கு வடலூர்-பண்ருட்டி சாலையில் இருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவன வரவேற்பு நுழைவாயிலில் ஆரம்பித்து வட்டம்-3 முதல் 13 வரை உள்ள பகுதிதான் அந்தக்கால பெருமத்தூர். புளுடைமன்ட் கட்டிடம், நியூசினிமா தியேட்டர், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், நகர நிர்வாக அலுவலகம், பொது மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, முக்கிய கடைவீதி, சுடுகாடு என எல்லாமே அதில்தான் அமைந்திருக்கின்றன. இன்றைக்கு ஜெகஜ் ஜோதியாக, பரபரப்பாக இந்த இடம் மாறிக்கிடக்கிறது.

இதுதாங்க எங்க நிலம்…

ஆனால், அன்றைக்கு… பரம்பரை பரம்பரையாக அங்கு வசித்து வந்தவர்கள் ஆளுக்கொரு திசையில் அலைந்து திரிந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள 180 கிராமங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

அன்றைய மணியக்காரரான கலியபெருமாள் இப்போது வசிப்பது கீழுர் கிராமத்தில். கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் நெய்வேலி நுழைவாயிலிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வடக்குத்து. சென்னைக்கு வரும் வீராணம் குடிநீரை சுத்திகரித்து பம்ப் செய்யும் நீரேற்று நிலையம் இங்குதான் இருக்கிறது. அதிலிருந்து வடகிழக்காக 6 கி.மீ. தொலைவில்தான் வடக்குத்து இருக்கிறது தேடிப்பிடித்து அவரைச் சந்தித்தபோது, ”நீங்கள் ஊரை காலி செய்தபோது உங்களுக்கு செய்து தருவதாகச் சொன்ன எல்லாவற்றையும் நிலக்கரி நிறுவனம் செய்து கொடுத்துவிட்டதா?’ என்று கேட்டோம்.

மனிதர் குமுற ஆரம்பித்துவிட்டார். ‘‘எங்கங்க செஞ்சாங்க? இழப்பீட்டு பணம் மட்டும்தான் கொடுத்தாங்க. அதையும் முறைப்படியெல்லாம் கொடுக்கல. ‘குடியிருக்க வீடும், நிலமும் முசாபர் காட்டில் ஒதுக்கியிருக் கிறோம்’னு வாயளவுலதான் சொன்னாங்க. அங்க போய் பார்த்தா, வெறும் காடு. சீரமைச்சித் தரச்சொல்லிக் கேட்டோம். யாருமே கண்டுக்கல. கால் போன போக்குல கிடைச்ச இடத்துல எல்லாரும் குடியேறிட்டோம். பெருமத்தூரை விட்டு எங்களை யெல்லாம் வெளியில கொண்டுபோய் விடறதுக்கு லாரியை மட்டும் சரியா அனுப்பினாங்க.. ஆனா, யாருக்கும் வேலையோ, வேற வசதிகளோ செய்து கொடுக்கல” என்று வேதனை பொங்கச் சொன்னவர்,

கலியபெருமாள்

”சங்கம் அமைச்சி 50 வருஷமா போராடிக்கிட்டே இருக்கோம்’’ என்று விரக்தியுடன் சொன்னார்.

ரெத்தினம் படையாச்சியின் வாரிசுகளில் ஒருவரான பட்டுச்சாமியும் இந்த கிராமத்தில்தான் தற்போது வசிக்கிறார். அந்தக் குடும்பம் வாழும் முந்திரிக் காட்டு வீட்டைத்தேடிப்பிடித்து, ”பட்டுச்சாமி இருக்கிறாரா?” என்று உரக்கக் குரல் கொடுத்தோம்.

”கொஞ்சம் உட்காருங்க. பேப்பர் படிக்கறதுக்காக வடக்குத்து வரைக்கும் போயிருக்கார். இப்ப வந்து டுவார்” என்றார் அவரின் மகள்களில் ஒருவர்.

ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு, சைக்கிளில் வந்திறங்கினார் பட்டுச்சாமி.

‘‘சின்ன வயசுல பேப்பர் படிச்ச பழக்கம். இன்னமும் போகல. பேப்பர் படிக்கலனா தலையே வெடிச்சுடும்’’ பேப்பர் வாங்கக் கூட இயலாத நிலைமையில் வாழ்க்கை உருண்டு கொண்டிருப்பதை வார்த்தைகளில் காட்டியவரிடம்,

தன் வீட்டுக்கு முன் பட்டுச்சாமி

‘‘இழப்பீடா கொடுத்ததையெல்லாம் என்னதான் செய்தீங்க’’ என்று கேட்டோம்.

‘‘அப்ப எனக்கு அஞ்சு வயசு. பணம் மட்டும்தான் கொடுத்தாங்க. அதை எடுத்துகிட்டு அஞ்சு குழந்தைகளோட பாச்சாரபாளையத்துல கொஞ்சம் நிலம் வாங்கினாங்க எங்கம்மா. போட்டடிச்சி குடும்பத்தைக் காப்பாத்தினாங்க. வளர்ந்து நின்ன பிறகும் ஆம்பள பசங்க யாருக்கும் வேலையில்ல, பொம்பள பிள்ளங்களை வேற கட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால எல்லா காசும், வாங்கிப்போட்ட நிலமும் கையை விட்டுப்போயிருச்சி. என் ஒருத்தனுக்காவது நிலக்கரி நிறுவனத்துல அப்ப வேலை கொடுத்திருந்தா அதை வைச்சே நிம்மதியா பொழைச்சிருப்போம்’’ என்று வேதனைப்படும் பட்டுச்சாமிக்கு, தற்போது ஒரு குண்டுமணி நிலம் கூட சொந்தமாக இல்லை. ஓய்வு பெறும் வயதைத் தாண்டிவிட்ட பிறகும் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. ஒரு காலத்தில் தன் குடும்பத்தின் ஆதிக்கம் மிகுந்திருந்த அதே பெருமத்தூரில் (நெய்வேலி நகரம்) தினக்கூலியாக வேலைக்குப் போகிறார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்தான் வேலை. தினம் நூறு ரூபாய் சம்பளம்.

”எனக்கு அஞ்சு பொம்பளப் பிள்ளைங்க. மூத்தவளைக் கட்டிக் கொடுத்துட்டேன். மீதமிருக்கற நாலு பேர்ல மூத்தவ ஐ.டி.ஐ., அடுத்தவ பி.எஸ்சி-னு படிக்கறாங்க. அவங்களுக்காவது வேலை கொடுங்கனு கேட்கிறேன் ஒருத்தரும் வாயைத் தொறக்கமாட்டேங்கறாங்க. யாருக்காவது ஒருத்தருக்கு வேலை… இல்லனா, எங்களுக்குத் தரவேண்டிய வீட்டு மனை, நிலம், தரிசு நிலத்துக்குரிய இழப்பீடு இதெல்லாம் கொடுத்தாங்கனா… இதுங்கள கரைச் சேர்த்துட்டு கண்ணை மூடிடுவேன்’’ என்று பட்டுச்சாமி கண்கள் கலங்கச் சொல்லும்போது, அதிகார மற்றும் அரசியல் வர்க்கத்தின் மீதே கோபம் பொத்துக்கொள்கிறது.

உடைமையைக் கொடுத்தவன் தெருவில் பிச்சைக்காரனாக திரிய… எங்கிருந்தோ வரும் சுரண்டல்காரர்கள் உண்டு கொழுத்து உற்சாகமாக வாழ்கிறார்கள். இதுதான் நேற்றைய இந்தியாவிலும்… இன்றைய இந்தியாவிலும் நிஜமாக இருக்கிறது.

இந்தச் சூழலில், ‘நாளைய இந்தியாவிலும் இதுதாண்டா ராசா நிலைமை’ என்று நெற்றிப்பொட்டில் அடித்துச்சொல்வதுபோல… நெய்வேலி அருகேயுள்ள கம்மாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களைக் கையகப்படுத்தப்போவதாக இப்போது நோட்டீஸ் கொடுத்திருக்கிறது நிலக்கரி நிறுவன நிர்வாகம்.

‘அரசாங்கத்திடம் நிலத்தைக் கொடுத்தால் நிலைமை என்னாகும்’ என்பதற்கு வாழும் உதாரணம்தான் பட்டுச்சாமி. அவரின் சோகக்கதையைப் படித்த பிறகும் கூட, ‘நாட்டின் வளர்ச்சிக்காகத்தானே கேட்கிறார்கள். அப்படி இல்லை என்றால் தொழிற்சாலைகள் எப்படி வரும்… நாடு முன்னேறும்?’ என்று கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா…?

அப்படி கேட்பவர்கள்.. பட்டுச்சாமியைப்போல பட்டுப்போய் நெய்வேலியைச் சுற்றி வாடிக்கொண்டி ருக்கும் ஜீவன்களை ஒரு முறை எட்டிப்பாருங்கள்…!

யாருக்குப் பலன்?

நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களின் சலுகைகளுக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கொண்டே இருக்கின்றன. இவர்களுக்காக அதிக குரல் கொடுக்கும் பா.ம.க., இன்றைக்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தை ஆளும் கூட்டணியிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, இந்த மக்களின் சோகத்துக்கு விடிவில்லை. கடந்த 16-ம் தேதிகூட ஒரு போராட் டத்தை நடத்தியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

‘‘ஆட்சி அதிகாரம் இருக்கும்போதே சாதிக்க முடியாத இவர்களால், என்றைக்குமே எதையும் சாதிக்கமுடியாது என்பதுதான் உண்மை. இந்தப் போராட்டங்களால் அந்தக்கட்சிக்குத்தான் பலன்” என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர்.

ராமதாஸ் போராட்டம்

அன்றும் இன்றும்!

ஏகாதசியன்று காலை நாலு மணிக்கெல்லாம் சாமி கும்பிட்டுவிட்டு, ஊரில் உள்ள அத்தனை பேர் வீடுகளுக்கும் சென்று சாப்பிட வருமாறு அழைப்பது பட்டுச்சாமியின் தந்தை ரெத்தினத்தின் வழக்கம். தீபாவளி, பொங்கல் என்றாலும் இதே முறைதான். அன்றைக்கு அப்படி வாழ்ந்த இந்தக் குடும்பம் இப்போது ஊரில் இருக்கும் தங்களின் உறவினர்களின் ரேஷன் கார்டு களுக்கு கிடைக்கும் அரிசியை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது நெய்வேலி நகர குடியிருப்புகளாக மாறிக் கிடக்கும் பகுதி, அன்று இவர்களுக்கு சொந்தமான முந்திரித் தோப்பு. அதிலிருந்து ஒரு மகசூலுக்கு 300 மூட்டை முந்திரிக்கொட்டை கிடைக்கும். விற்றது போக உறவினர் வீடுகளுக்கும் தாராளமாக கொடுப்பார்களாம். அந்த முந்திரி இப்போதும் இந்தக் குடும்பத் துக்கு ஏதோ ஒரு வகையில் கைகொடுக்கிறது. இரண்டு கிலோ முந்திரிக் கொட்டைகளை உடைத்துக் கொடுத்தால் 7 ரூபாய் கூலி கிடைக்கும். வீட்டில் இருக்கும் புவனேஸ்வரியும், ராஜலட்சுமியும் இப்படி சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் படித்திருக்கிறார்கள் மற்ற சகோதரிகளான தங்கம் மற்றும் தனலட்சுமி.

பல ஜோடி உழவு மாடுகள் இருந்தவரின் வாரிசு வீட்டில் இப்போது இருப்பது இரண்டு மூன்று வெள்ளாடு கள்தான். பண்ணையாட்களுக்கு தாலி, துணிமணி எடுத்துக்கொடுத்து தான தர்மங்கள் செய்தவர்கள் வீட்டில், இன்று போட்டுக்கொள்ள சரியான துணிமணி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் திருமண வயதைத் தொட்டுவிட்ட பெண்கள்.

நூற்றாண்டு மோசடி!

நிலத்தைக் கொடுத்தால் ‘அது உண்டு, இது உண்டு’ என்று அன்றைக்கு ஓர் அறிவிப்பை சிறகடிக்கவிட்டு, பல குடும்பங்களை சந்தியில் நிற்க வைத்த மத்திய அரசு, இப்போதும் கூட அதேபோல ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

‘தொழிற்சாலைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைய நிலங்களைக் கொடுப்போருக்கு குடியிருக்க மாற்று இடம், மாற்று நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, தொழிற்சாலை கட்டுமான வேலைகளில் பணி, விரும்பினால் இழப்பீட்டுத் தொகையில் 20 சதவிகிதத்தை அந்த தொழிற்சாலை பங்குகளில் முதலீடு செய்யும் வசதி, நிலமற்றவர்களுக்கும் வீடுகள், கடைகள், மாட்டுக்கொட்டகை கட்டுவதற்கு நிதி உதவி, குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம், குடிநீர், சாலைகள்’ என்று நீளும் இந்த அறிவிப்பு, 1894-ம் ஆண்டு வெள்ளைக்கார அரசால் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களின் ‘புத்தம் புதிய காப்பி’ அவ்வளவுதான். இதில் புதிதாக சேர்ந்திருப்பது பங்கு முதலீடு, மாட்டுக்கொட்டகை என்று ஒரு சில விஷயங்கள்தான். மற்றபடி எல்லாமே நூற்றாண்டு மோசடிதான்.

from Tamilnadu News https://ift.tt/zUVfDTu