நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குழு வட்டார அளவிலான சாலை பாதுகாப்பு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுமார் 86 பள்ளிகளைச் சேர்ந்த சாலை பாதுகாப்பு உறுப்பினர்களான பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதோடு, இந்த விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, விழாவில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் அதிகப்படியாக சுமார் 234 குழந்தை திருமணங்கள் நடந்திருக்கின்றன. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் தற்போது இவர்கள் குழந்தைக்கு தாயாகும் நிலையில் இருப்பதால், சிறப்பு குழுக்கள் மூலம் இந்த சிறுமிகள் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்ற சூழ்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிகப்படியான குழந்தை திருமணம் நடந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 234 சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், ஒரு குழந்தைக்கு தாயாகக்கூடிய நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை என்பது மிக அதிகம். நமது மாவட்டத்திலுள்ள எல்லா பெண் குழந்தைகளும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, மேற்படிப்பு படிக்க வேண்டும். அதன்பிறகு, 21 வயதை கடந்தபிறகு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த 18 வயதுக்கு கீழ் உள்ள திருமணமான 234 சிறுமிகளையும் அந்தந்த கிராம சுகாதார செவிலியர் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதில், 90 சதவிகி சிறுமிகள், அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் என்பதுதான் கூடுதல் வேதனை.

இனி குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோர்களை அழைத்து 21 வயது நிரம்பிய பெண்ணிற்கே திருமணம் செய்ய வேண்டும் எனவும், 18 வயதிற்குள் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெற்றோர்களை அழைத்து பேச வேண்டும். இதை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் சீரியஸாக கடைப்பிடித்தால், குழந்தை திருமணத்தை தடுக்க முடியும். பெண்களுக்கு தேவையான கல்வியை தர இயலும். ஒவ்வொரு ஆசிரியரும் முயற்சி செய்தால், இதை சாதிக்க முடியும். ஏனென்றால், அரசுப் பள்ளிகளால் சாதிக்க முடியாத விசயங்கள் என்று எதுவும் இல்லை” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/y3RUTwg
