இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்று மணிப்பூர் கலவரம். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகள் மணிப்பூர் விவகாரத்தில் இந்தியாவில் நடந்த, நடந்து வரும் கொடூரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருந்தபோது உலகின் பல நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. இதற்கிடையில், கடந்த மே மாதம் 4-ம் தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ஊர்வலாமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியெடுத்தது.

மணிப்பூர்

அந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுத் தொடங்கின. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்கியது. அப்போதுதான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே, “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது அவமானகரமானது” எனக் குமுறினார். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை என்றும், வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க மத்திய அரசு பயப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

அதன் காரணமாகவே, நாடாளுமன்றம் கூச்சல் குழப்பம், எதிர்கட்சிகளின் போராட்டத்தால் நிரம்பிவழிகிறது. இந்தச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயார் என அறிவித்தார். ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து சட்டவிதி 176-ன்கீழ் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என மத்திய பா.ஜ.க அரசு தரப்பில் நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிதி 267-ன்கீழ் மணிப்பூர் கொடுமை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்திய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற விதிகள்:

இந்தியாவின் தனித்துவமான ஜனநாயக அமைப்பானது, இந்திய அரசியலமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த நீதித்துறைகள் வழங்கிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில், இந்தியாவின் நாடாளுமன்ற நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 118 (1) பிரிவின்கீழ் ‘நாடாளுமன்ற நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள்’ ஜூன் 2, 1964-ல் உருவாக்கப்பட்டன.

ஜூலை 1, 1964 முதல் தற்போது வரை இந்த விதிகள்தான் நடைமுறையில் இருக்கின்றன. நாடாளுமன்ற நடைமுறை விதிகளின் 9 பதிப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு, நாடாளுமன்ற சபையால் இன்றளவும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதில் உள்ளடக்கப்பட்டவைதான் விதிகள் 176, 267.

மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா

பா.ஜ.க முன்வைக்கும் சட்டவிதி 176 என்ன சொல்கிறது?

நாடாளுமன்ற நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதி 176-ன் படி, நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் குறித்து எழுதப்பட்ட நோட்டீஸில், குறைந்தபட்சம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் மூலம் ஆதரவு பெற்று, நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கலாம்.

அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் (துணை ஜனாதிபதி) நாடாளுமன்ற கவுன்சில் தலைவருடன் கலந்தாலோசித்து, குறுகிய கால விவாதத்துக்கான தேதி மற்றும் நேரத்தை நிர்ணயிப்பார். அவசர மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் குறித்து விவாதிக்க, அதிகபட்சமாக இரண்டரை மணிநேரத்துக்கு மிகாமல் (குறுகிய கால விவாதத்துக்கு மட்டுமே) அனுமதிக்கப்படும். மத்திய அரசு மணிப்பூர் விவகாரத்தை இந்த சட்டவிதியின்கீழ் மட்டுமே விவாதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான சட்ட விதி 267:

ஆனால், மாநிலங்களவைத் தலைவர் ஆலோசித்து, தேதி குறித்து, நேரம் குறித்து, அதன் பிறகு நிதானமாக விவாதிக்கப்படும் பிரச்னையாக அல்லாமல், அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாக இருந்தால், காலத் தாமதமின்றி விவாதிக்க மாநில கவுன்சிலில் சில நடைமுறைகள் இருக்கின்றன. அதன்படி, நாடாளுமன்ற விதி 267-ன் மூலம் அவசரப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த விதியைப் பயன்படுத்துவதன் மூலம் அரசின் கவனத்தையும், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்பதால், விவாதத்துக்கு முன்வைக்கப்படும் பிரச்னை, சமூகம் மற்றும் அரசுடன் ஒருங்கிணைந்த பிரச்னையாக இருக்க வேண்டும்.

எனவே அது போன்ற ஒரு விவகாரத்தை விவாதிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர், எந்த நாளில் அந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமோ அந்த நாளில், காலை 10 மணிக்கு முன்பாக, குறிப்பிட்ட பிரச்னை குறித்து அவையின் பொதுச்செயலாளருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவையின் பொதுச்செயலாளர் இந்த நோட்டீஸை அவைத்தலைவரிடம் ஒப்படைப்பார். அவைத்தலைவர் ஒப்புதல் அளித்தால், நோட்டீஸ் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னையின் தன்மையை சுருக்கமான அறிக்கையுடன் அறிமுகப்படுத்துவார். அதன் பிறகு, அவைத்தலைவரின் ஒப்புதல் நோட்டீஸ், வாக்கெடுப்புக்கு விடப்படும்.

மல்லிகார்ஜுன கார்கே

அந்த வாக்கெடுப்பில், அந்த நோட்டீஸ் வெற்றிப்பெற்றுவிட்டால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டியலிடப்பட்ட அனைத்து விஷயங்களும் ஒத்திவைக்கப்பட்டு, நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட முக்கியப் பிரச்னை குறித்து மட்டுமே, அன்றைய நாடாளுமன்ற அலுவலில் விவாதிக்கப்படும். ஒருவேளை வாக்கெடுப்பு தோல்வியடைந்தால், வழக்கம்போல நாடாளுமன்ற விவகாரங்கள் நடைபெறும். இதன் அடிப்படையில்தான் 267-வது விதியின்கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் அவையின் பொதுச்செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எப்போதெல்லாம் 267-வது விதிக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டிருக்கிறது?

நாடாளுமன்றத்தின் கடந்தகால அமர்வுகளில், ஜி.எஸ்.டி விவகாரம், ரஃபேல் ஒப்பந்தம், காஷ்மீர் பிரச்னை, பண மதிப்பிழப்பு, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க காரணமான விவசாயச் சீர்திருத்தச் சட்டம், மத்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம், மிசோரம் எல்லைப் பிரச்னைகள், கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாக்கப்பட்ட விவகாரம், எரிபொருள் விலை உயர்வு, பிற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றை இந்த 267-ன் விதியின்கீழ் விவாதிக்க அனுமதி கேட்டபோது, அவைத்தலைவர் விவாதிக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

மோடி

இந்த வரிசையில், மணிப்பூர் விவகாரமும் சேர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. நாட்டின் இந்த உள்நாட்டுக் கலவரத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டிய அரசு அடுத்து என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…

from Tamilnadu News https://ift.tt/OVQ8rnW