மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், இந்த மாதத் தொடக்கத்தில் தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் பா.ஜ.க கூட்டணி அரசில் சேர்ந்துவிட்டார். அதோடு தனக்கு 40 எம்.எல்.ஏ-க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் மற்றும் எம்.பி-க்களின் ஆதரவு இருப்பதாகவும், அதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தைத் தனக்கு ஒதுக்கவேண்டும் என்றும் கோரி, அஜித் பவார் தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். சரத் பவார் அணியும் தங்களிடம் கேட்காமல் தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.

தற்போது தேர்தல் கமிஷன் இது தொடர்பாக சரத் பவார் அணிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. சரத் பவார் அணியிடம் இருக்கும் ஆவணங்களை 30 நாள்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறி, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதை அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் உறுதிபடுத்தியிருக்கிறார். அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி சரத் பவார் அணி, மாநில சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறது. அதோடு கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோரை கட்சியிலிருந்து சரத் பவார் நீக்கி, உத்தரவிட்டிருக்கிறார்.
மற்றொரு புறம் சரத் பவாருடன் சமாதானமாகச் செல்ல அஜித் பவார் தரப்பில் இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சரத் பவார், அவர்களுடன் சமாதானமாகப் போக மறுத்துவிட்டார். இதனால் சரத் பவாரிடம் அவரது கட்சி சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் பிரச்னை பெரிதாகத்தான் தெரிகிறது. சரத் பவாருக்குக் கட்சி மற்றும் சின்னம் கிடைக்குமா என்று தெரியவில்லை” என்று கவலையுடன் தெரிவித்தார். சரத் பவார் தங்களுடன் வந்துவிடுவார் என்று அஜித் பவார் அணி இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது.

விரைவில் மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. அதற்குள் கட்சியின் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் கமிஷன் முடிவுசெய்யும் என்று தெரிகிறது. தற்போது அஜித் பவார் தனக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூட்டிய கூட்டத்தில், 40 பேர் பங்கேற்கவில்லை.
from Tamilnadu News https://ift.tt/8KMLVn3
