ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த 21-ம் தேதி ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குதா, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர், ஒரு ரெட் டைரியை சட்டசபைக்குக் கொண்டுவந்து, அதில் முதல்வர் அசோக் கெலாட்டின் முறைகேடான நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன எனப் பேசினார். இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி `மொஹபத் கி துகான்’ அன்பின் கடைகளைத் திறக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், உண்மையில், `லூட் கி துகான், ஜூட் கி துகான்’ (கொள்ளை மற்றும் பொய்களின் கடை) ஆகியவற்றின் சமீபத்திய கடைதான் ரெட் டைரி. இந்த டைரியில் காங்கிரஸின் ஊழல் பற்றிய ரகசியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரெட் டைரி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை இல்லாமல் செய்யும்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநில அரசின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ரெட் டைரி என்பதே ஒரு கற்பனை. அப்படி ஒரு டைரியே இல்லை. பிரதமர் மோடியால் இல்லாத ரெட் டைரியைப் பார்க்க முடிகிறது. ஆனால் ரெட் சிலிண்டர், ரெட் தக்காளிகளைப் பார்க்க முடியவில்லை. விலைவாசி உயர்வால் மக்களின் முகங்கள் ரெட்டாக மாறியிருப்பதை அவரால் பார்க்க முடியவில்லை. எனவே வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் சிவப்புக் கொடி காட்டுவார்கள். அதையாவது பார்க்கட்டும்” எனப் பேசியிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/58Wdbrv