கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், நிரந்தர தொழிலாளர்கள், கம்பெனி தொழிலாளர்கள், சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் என்.எல்.சி நிர்வாகம், தமிழக அரசுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் நிலக்கரி எடுப்பதற்கு போதுமான நிலம் இல்லை என்றும், அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தப் போகிறோம் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அதையடுத்து இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி,  கத்தாழை பகுதிகளில் கடந்த 2006 – 2013 காலக்கட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் கடந்த 26-ம் தேதி பணியை துவங்கியது என்.எல்.சி நிர்வாகம்.

என்.எல்.சி வன்முறை

என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாறு அமைக்கும் அந்த பணிக்காக, நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் பணியை தொடர்ந்தது என்.எல்.சி நிர்வாகம்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், “என்.எல்.சி நிர்வாகம் தற்போது பணியை தொடங்கியிருக்கும் அந்த நிலங்கள் கடந்த 2006 – 2013 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதுதான். நிலத்துக்கான தொகையை வழங்கிவிட்ட பிறகும்,  நில உரிமையாளர்கள் அதில் விவசாயம் செய்து வந்தனர். சுரங்கப் பணிகள் நடக்கும்போது அந்த நிலங்களை கையகப்படுத்தலாம் என்று நினைத்த என்.எல்.சி நிர்வாகம், கருணை அடிப்படையில் அந்த விவசாயிகள் விவசாயம் செய்ததை என்.எல்.சி நிர்வாகம் தடை செய்யவில்லை.

கடந்த 10, 15 வருடங்களாக அந்த நிலங்கள் விவசாயிகளின் அனுபவத்தில்தான் இருந்து வருகிறது. அப்போதே முழுமையாக கையப்படுத்தியிருந்தால் இப்போது இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. தற்போது புதிதாக கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு அதிக இழப்பீடு வழங்கும்போது, ஏக்கத்துடன் தங்களுக்கும் அதே இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, கருணைத் தொகையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும் முன்பு வழங்கப்பட்ட தொகையை மூன்று மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு ரூ.6 லட்சத்துக்கு நிலங்களை விற்றவருக்கு தற்போது ரூ.18 லட்சம் வழங்கப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு விற்ற நிலங்களுக்கு தற்போது கருணைத் தொகை வழங்கப்படுவதெல்லாம் பெரிய விஷயம். அதை விவசாயிகளுக்கும் தெரிவித்துவிட்டோம். மேல்வளையமாதேவியில் வெறும் 30 ஹெக்டேர் நிலத்தில்தான் தற்போது பணி துவங்கப்பட்டிருக்கிறது.

என்.எல்.சி வன்முறை

அதில் 72 பட்டாதாரர்கள்  இருக்கிறார்கள். அதில் 65 பேர் இழப்பீட்டுத் தொகையையும் வாங்கிவிட்டார்கள். சிலர் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வரையில் இழப்பீடு வாங்கியிருக்கிறார்கள். அதில் நீதிமன்றம் சென்ற மற்றவர்களுக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்கவில்லை. அவர்களுக்கும் லோக் அதாலத் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த 30 ஹெக்டேர் இடத்தில் பணி துவங்க இருப்பதால் பயிர் வைக்காதீர்கள் என்று விவசாயிகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது. அதையும் மீறி அவர்கள் பயிர் வைத்துவிட்டார்கள். ஆனாலும் அந்த பயிர் சேதாரத்திற்கும் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துவிட்டோம் ” என்றார்.

இதற்கிடையில் விவசாய நிலங்களில் ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அதையடுத்து என்.எல்.சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அதற்காக இன்று காலை 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 போலீஸார் நெய்வேலியில் குவிக்கப்பட்டனர். அத்துடன் நெய்வேலி நுழைவு வாயிலை சீல் வைத்ததுடன், வஜ்ரா வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. அதையடுத்து மதியம் 12 மணியளவில் போராட்ட மேடைக்கு வந்த அன்புமணி ராமதாஸ், “தனியாருக்கு விற்கப்பட இருக்கும் என்.எல்.சிக்காக தமிழக அரசு ஏன் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் ? அது அரசின் வேலை கிடையாது. மீண்டும் தமிழக அரசை எச்சரிக்கிறோம். நிறுத்திக்கொள்ளங்கள். இனி ஒரு பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தக் கூடாது. இதுவரை கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்” என்று பேசிவிட்டு கீழே இறங்கியவர், தொண்டர்களுடன் என்.எல்.சி அலுவலகத்திற்குள் தடையை மீறி நுழைய முயற்சி செய்தார்.

அப்போது அங்கிருந்த போலீஸார் அவரை தடுக்க முயன்றனர். அப்போது பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் போலீஸார் மீது தண்ணீர் பாக்கெட்டை வீசியதுடன், போலீஸ் வாகனங்களை கல்வீசித் தாக்கினர். அதனால் போலீஸார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் அதன்பிறகும் போலீஸார் மீது கல்வீச்சை தொடர்ந்தனர் பா.ம.கவினர். அதில் நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத்தின் மண்டை உடைந்தது. அவர் உட்பட 12 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து வானத்தை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் போலீஸார். அன்புமணி மற்றும் 500-க்கும் மேற்பட்ட பா.ம.க நிர்வாகிகள் அங்கிருக்கும் தனியார் திருமண நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

from Tamilnadu News https://ift.tt/1kN7Wa9