`சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் ஆளும் தி.மு.க தனது கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்களையே 9 உறுப்பினர் பதவிக்கும் தேர்ந்தெடுத்திருக்கிறது. மொத்தமுள்ள 9 உறுப்பினர் இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தி.மு.க உறுதியளித்திருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபுவின் தலையீட்டால் அந்த ஒன்றும் பறிபோய்விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர் கதர் கட்சி கவுன்சிலர்கள்.’

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று (27.07.2023) காலை ரிப்பன் கட்டட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. அதில், தி.மு.கவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ஏ.சந்திரன் (வார்டு-27), க. தேவி கதிரேசன் (வார்டு-39), ராஜேஷ் ஜெயின் (வார்டு-57), நா.உஷா (வார்டு-83), ம.கமல் (வார்டு-86), ஜெ.புஷ்பலதா (வார்டு-103), எம்.ஸ்ரீதரன் (வார்டு-140), வ.செல்வக்குமார் (வார்டு-154), அ.முருகேசன் (வார்டு-200) ஆகிய 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் – ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சான்றிதழ்கள் வழங்க, மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேசமயம் இந்த நிகழ்ச்சியை தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாகப் புறக்கணித்தது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவரான எம்.எஸ்.திரவியத்தை தொடர்புகொண்டுப் பேசினோம். “சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழுவுக்கான 9 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஒரு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவெடுத்தோம். அதைத்தொடர்ந்து எனது தலைமையில் கடந்த ஜூலை 22-ம் தேதி மாமன்ற காங்கிரஸ் கட்சிக்குழு (கவுன்சிலர்கள்) கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினேன். அப்போது, எங்கள் கட்சியின் கவுன்சிலர்களான வழக்கறிஞர் சிவராஜசேகரன், பானுப்பிரியா, அமிர்தவர்ஷினி ஆகிய மூவரும் அந்த ஒரு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்தனர்.
பின்னர் அனைவரிடமும் ஆலோசனை செய்ததன் இறுதியில், இந்தப் பதவியை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 63-வது வார்டு கவுன்சிலருமான சிவராஜசேகரனுக்குப் பெற்றுத்தர சம்மதித்து, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றோம். பின்னர் எங்கள் தலைவரின் ஒப்புதல் மற்றும் பரிந்துரையுடன் எங்கள் வேட்பாளர் சிவராஜசேகரன் போட்டியிடுதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேயர் பிரியா, துணைமேயர் மகேஸ்குமாருக்கு கடிதம் எழுதினோம்.

இதற்கிடையில், எங்கள் கட்சி விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலையிட்டு, `காங்கிரஸ் சார்பாக சிவராஜசேகரன் வேண்டாம். உங்கள் கட்சியைச் சேர்ந்த பானுப்பிரியாவை வேட்பாளராக நிறுத்துங்கள்!’ என்றார். நாங்களோ, `கட்சியின் அனைத்து கவுன்சிலர்களும் கூடி, ஆலோசனைக் கூட்டம் நடத்தி அனைவரின் ஒப்புதலுடன் சிவராஜசேகரனை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இப்போது திடீரென எப்படி மாற்ற முடியும்? எங்கள் கட்சி எடுத்த முடிவின்படி சிவராஜசேகரனைத்தான் நிறுத்துவோம்’ என தெரிவித்தோம்.
இந்த நிலையில், எங்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்டத்திலேயே சேர்த்துக்கொள்ளாமல், எங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் 9 உறுப்பினர் பதவிக்கும் தி.மு.க கவுன்சிலர்களையே போட்டியின்றி தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எங்களைப் புறக்கணித்தவர்களை நாங்களும் புறக்கணிக்கும் விதமாக நடைபெற்ற தேர்தலில் நாங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை!” எனத் தெரிவித்தார்.

மேலும், “வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு நிறைய அதிருப்தி எங்களுக்கு இருக்கிறது. தி.மு.கவினர் தொடர்ந்து கூட்டணிக்கட்சியான எங்களை பல்வேறு விதங்களில் புறக்கணித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி கட்டடத்துக்குள் ஆளும்கட்சித் தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அவர்களுக்குத் தனியாக அலுவலக அறையும் ஒதுக்கியிருக்கிறார்கள். அதேசமயம், 14 கவுன்சிலர்கள் வைத்திருக்கும் எங்களுக்கும், 15 கவுன்சிலர்கள் வைத்திருக்கும் அ.தி.மு.கவுக்கும்கூட தனியாக அலுவலகம் ஒதுக்கவில்லை! எனவே காங்கிரஸ் கட்சிக்கும் ரிப்பன் கட்டடத்துக்குள் அலுவலகம் வேண்டும். இந்த பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடப்போகிறோம்!” என அதிரடியாகத் தெரிவித்தார்.
from Tamilnadu News https://ift.tt/VmMYCoU
