நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில் நிலவிய கோஷ்டிப்பூசல் காரணமாக மாநகராட்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாகப் புகார்கள் சென்றன. அதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வஹாப், மேயர் சரவணன் இடையே நிலவிய உட்கட்சிப்பூசல் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்பது தெரியவந்ததால், அப்துல் வஹாப் அதிரடியாக நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் முடிவுக்கு வரவில்லை. அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள், நெல்லை மாநகராட்சியில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அவர்கள் மேயர் சரவணனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள். அதனால் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் மக்கள் பணிகளைச் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக பேச்சு எழுந்திருக்கிறது. மாநகராட்சியின் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தி.மு.க கவுன்சிலர்களே முட்டுக்கட்டை போடும் வினோதம் நெல்லையில் நடக்கிறது.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழுவுக்கு 9 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சியின் 55 உறுப்பினர்களில் 51 பேர் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதனால் பெரும்பான்மையுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளரான டி.பி.எம்.மைதீன்கான் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து எதிர்தரப்பில் மூவர் போட்டியிட்டனர். இறுதியில் டி.பி.எம்.மைதீன்கான் அறிவித்த 9 வேட்பாளர்களில் பாலம்மாள், ஆமீனாபீவி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் தோல்வியடைந்தனர். எதிர்த்தரப்பினர் நிறுத்திய மூன்று உறுப்பினர்களும் வெற்றியடைந்தனர்.
இந்தச் சூழலில், நெல்லை மாநகராட்சிக் கூட்டத்திலும் மேயர் சரவணனுக்கு எதிரான கோஷ்டியினரின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. நெல்லை டவுன் ஆர்ச் பகுதியிலிருந்து குறுக்குத்துறைக்குச் செல்லும் சாலைக்கு தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானத்தை மேயர் சரவனன் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு தி.மு.க கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை கண்ணன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவமதித்துப் பேசியவர் என்பதால், அவர் பெயரை சூட்டக் கூடாது என்றார்கள். அதனால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

அதைத் தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் பேசிய நெல்லை மண்டலத் தலைவரான மகேஸ்வரி, “வரிவிதிப்பு மேல்முறையீட்டுத் தேர்தல் தொடர்பாக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நான் மற்றும் சில பெண் கவுன்சிலர்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்தார்” எனக் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பெண் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டால் மாநகராட்சி அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, ’கட்சி விவகாரங்களை மாநகராட்சிக் கூட்டத்தில் பேச வேண்டாம்’ என ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டபோதிலும், பெண் கவுன்சிலர்கள், `எங்கள் உயிர்ப் பிரச்னையை எங்கு போய் சொல்ல வேண்டும்?’ என பதில் கேள்வி கேட்டபடி… தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக கட்சியின் பிற உறுப்பினர்களும் மாநகராட்சி மேயர், ஆணையாளர் முன்னிலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மாநகராட்சிக் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக மேயர் சரவணன் அறிவித்துவிட்டு, கூட்ட அரங்கத்திலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள், ”நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கட்சித் தலைமையிடம் முறையிடுவோம். மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் எங்களது பிரச்னையின் தீவிரத்தையும் அறிவார். அவர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்” என்றார்கள்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில் நிலவும் உட்கட்சிப்பூசல் முடிவுக்கு வருவது எப்போது என்கிற கேள்வி கட்சித் தொண்டர்களிடம் எழுந்திருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/sUWV6Lu
