நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களின் நீண்ட பட்டியல் அரசிடம் இருக்கிறது. அதில், முக்கியமானதாக கருதப்படுவது டெல்லி சிறப்புச் சட்டம். அதாவது, டெல்லி அரசின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.

மணீஷ் திவாரி

இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றக் கூட்டத்தில் வரும் திங்கள்கிழமை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை குறிப்பிட்டு, “நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை உடனடியாக, தாமதிக்காமல் தொடங்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் நிலையில் மசோதாக்களை நிறைவேற்றுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிராகரிக்கப்படாதவரையில், கொள்கை விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு முக்கியப் பிரேரணையும் அரசினால் சபையின் முன் கொண்டுவரப்படக் கூடாது” எனக் காட்டமாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, “எனது கருத்துப்படி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனைகள் நடந்துவருகிறது. அதன்பிறகே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கான தேதி, நேரம் அறிவிக்கப்படும். எனவே, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைப்பதற்கு இடைப்பட்ட நேரத்தை சபை விவாதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். சட்டமியற்றுவதும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்புவதும் நமது அரசியலமைப்பு கடமை.

கெஜ்ரிவால் – மோடி

விதி 198-படி நம்பிக்கையில்லா தீர்மானம் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களை விவாதிப்பதற்கு தடை செய்யாது.” என விளக்கமளித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஆளும் அரசு பலமான நிலையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் டெல்லி மசோதா ஆகிய இரண்டிலும் பா.ஜ.க அரசை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. ராஜ்யசபாவில் தற்போது 238 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 120 உறுப்பினர்கள் தேவை.

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 105 உறுப்பினர்கள், ஒன்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு உறுதி. மேலும், ஐந்து நியமன எம்.பி.க்கள், இரண்டு சுயேட்சை எம்.பி.க்களின் ஆதரவையும் அரசு எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில், ஆளும் அரசுக்கு ஆதரவு உறுப்பினர்கள் 121 எனக் கூறப்படுகிறது.

from Tamilnadu News https://ift.tt/W6MYj7x