உலகிலேயே கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டம் கொண்ட நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக, 45 வயது பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில், 500 கிராமுக்கும் அதிகமாக கஞ்சா அல்லது 15 கிராமுக்கும் ஹெராயின் கடத்தி பிடிபட்டால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, ஒரு கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்பிருந்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜ் சுப்பையா என்பவர் தூக்கிலிடப்பட்டார். அதேபோல் 2017-ல் 50 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில், முகமது அஜீஸ் பின் ஹுசைன் என்பவருக்கு கடந்த புதன் கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது வரையில் கடந்த மார்ச் முதல், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 14 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான், 2018-ல் 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் சாரிதேவி ஜமானி (45) என்பவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, இன்று அதிகாலை சாரிதேவி ஜமானி தூக்கிலிடப்பட்டார். இதனை சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண் ஆனார் சாரிதேவி ஜமானி. இவ்வாறு போதைப்பொருள் தடுப்பில் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, மனித உரிமை குழுக்கள் பலவும் மரண தண்டனையை நிறுத்த வலியுறுத்திவருகின்றன.
from Tamilnadu News https://ift.tt/3cAHX5n
