இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக இருக்கும் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில், விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விதி 267-ன் கீழ், மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ விதி 176-ன் கீழ், குறுகிய விவாதத்துக்கு மட்டுமே தயார் எனக் கூறிவருகிறது.

பிரதமர் மோடி – நாடாளுமன்றம்

இருப்பினும் மத்திய அரசு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயாராக இல்லையென்று தெரிவதால், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தும்விதமாக, மத்திய அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு, மக்களவைச் செயலாளருக்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு குறைந்தபட்சம் 50 எம்.பி-க்கள் ஆதரவு தெரிவித்தால் அடுத்தகட்டமாக, மக்களவைச சபாநாயகரால் இதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் ஆளுங்கட்சி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.

இந்த நிலையில் தற்போது மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில், பா.ஜ.க 301 எம்.பி-க்களுடன் பெரும்பான்மையாக இருப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சிகள் மொத்தமாக வாக்களித்தாலும்கூட, அது நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகம்தான். சரி, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்குச் செல்லுமா, வெற்றி பெறுமா என்பது அது நிகழும்போது பார்க்கலாம்.

பாஜக, காங்கிரஸ்

அதற்கு முன்பு இதுவரை மக்களவையில் எத்தனை முறை ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராகக் கொண்டுவரப்படுவதால், மக்களவையில் மட்டுமே இதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இது மக்களவை நடத்தை விதி 198-ன் கீழ் எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்படும்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை மொத்தமாக 27 முறை மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதில் முதன்முறையாக 1963-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிகபட்சமாக பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மட்டும் 15 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதேசமயம், மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மூன்று முறை ஆட்சியிலிருக்கும் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறி, ஆட்சியை இழந்திருக்கிறது.

நாடாளுமன்றம்

முதலாவதாக, 1990-ல் நவம்பர் 7-ம் தேதி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ராமர் கோயில் விவகாரத்தில் பா.ஜ.க தனது ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, வெறும் 142 வாக்குகள் பெற்று, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறி ஆட்சியை இழந்தார். அடுத்ததாக 1997, ஏப்ரல் 11-ம் தேதி மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் எச்.டி.தேவேகவுடா அரசுக்கு 158 எம்.பி-க்கள் ஆதரவளிக்க, 292 எம்.பி-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்ததால், ஆளுங்கட்சியின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேபோல், 1999-ல் வாஜ்பாய் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 1999, ஏப்ரல் 17-ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க தன் ஆதரவைத் திரும்பப் பெற்றதால், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

இனி எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த பிரதமர் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக யாரால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை ஆண்டு வாரியாகப் பார்க்கலாம்.

1. 1963, ஆகஸ்ட்: 1962-ல் சீனாவுடனான போர் தோல்வியின் எதிரொலியாக, பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா கிருபலானியால் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நான்கு நாள்களாக சுமார் 20 மணி நேரம் நீடித்த விவாதத்தின் முடிவில், 62 எம்.பி-க்கள் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதவராக வாக்களித்தனர். 347 எம்.பி-க்கள் தீர்மானத்தை எதிர்த்ததால், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

2. 1964, செப்டம்பர்: பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசுக்கு எதிராக NC சாட்டர்ஜி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில் 307 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு எதிராகவும், 50 எம்.பி-க்கள் ஆதரவாகவும் வாக்களித்தால், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஜவர்ஹலால் நேரு

3. 1965, மார்ச்: லால் பகதூர் சாஸ்திரி அரசுக்கு எதிராக எஸ்.என்.திவேதியாவால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வாக்கெடுப்பில் 44 எம்.பி-க்கள் மட்டுமே தீர்மானத்து ஆதரவளித்ததால், 315 எம்.பி-க்களின் எதிர் வாக்குகள் மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

4. 1965, ஆகஸ்ட்: எம்.ஆர்.மசானி என்பவர், லால் பகதூர் சாஸ்திரி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், 318 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து தீர்மானத்தை வீழ்த்தினர். 66 எம்.பி-க்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர்.

5. 1966, ஆகஸ்ட்: ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த இந்திரா காந்தி, 1966, ஜனவரியில் பிரதமராகப் பதவியேற்றதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ஹிரேந்திரநாத் முகர்ஜியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் 61 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க, 270 எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

6. 1966, நவம்பர்: பாரதிய ஜனசங்கத்தின் பிரபல வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான யு.எம்.திரிவேதி, இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். தீர்மானத்துக்கு 36 எம்.பி-க்கள் ஆதரவாகவும், 235 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களித்தால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

7. 1967, மார்ச்: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக வாஜ்பாய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு 162 எம்.பி-க்கள் ஆதரவாகவும், 257 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

8. 1967, நவம்பர்: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக, மது லிமாயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், 88 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 215 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களித்தால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்திரா காந்தி

9. 1968, பிப்ரவரி: பால்ராஜ் மதோக்கால் என்பவர் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். தீர்மானத்துக்கு 75 எம்.பி-க்கள் ஆதரவு, 215 எம்.பி-க்கள் எதிர்ப்பு. அதன் காரணமாகத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

10. 1968, நவம்பர்: பாரதிய ஜனசங்கத்தின் கன்வர் லால் குப்தாவால் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு 90 எம்.பி-க்கள் ஆதரவும், 222 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

11. 1969, பிப்ரவரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பி.ராமமூர்த்தியால், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு 86 எம்.பி-க்கள் ஆதரவளிக்க, 215 எம்.பி-க்கள் எதிர்த்ததால், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

12. 1970, ஜூலை: மீண்டும் மது லிமாயே இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இதில் 137 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 243 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

13. 1973, நவம்பர்: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி ஜோதிர்மாய் பாசுவால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு 251 எம்.பி-க்கள் எதிராகவும், 54 எம்.பி-க்கள் ஆதரவாகவும் வாக்களித்த நிலையில், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

14. 1974, மே: ஜோதிர்மாய் பாசு மீண்டும் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

15. 1974, ஜூலை: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மீண்டும் ஜோதிர்மாய் பாசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், 63 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவும், 297 எம்.பி-க்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவே, தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய்

16. 1975, மே: ஜூன் 25, 1975 அன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, ஜோதிர்மாய் பாசுவால் மீண்டும், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

17. 1978, மே: மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சி.எம்.ஸ்டீபன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

18. 1979, ஜூலை: ஒய்.பி.சவானால், மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விவாதம் முடிவடையும் முன்பே மொரார்ஜி தேசாய் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலிலிருந்து விலகிவிட்டார். அப்போதுதான் வாக்கெடுப்பு நடத்தப்படாமலே முதல் முறையாக ஆட்சி கவிழ்ந்தது.

19. 1981, மே: ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், 92 எம்.ப-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவும், 278 எம்.பி-க்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவே, தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

20. 1981, செப்டம்பர்: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக, சி.பி.ஐ (எம்) எம்.பி சமர் முகர்ஜி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, 86 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 297 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களிக்க… தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்

21. 1982, ஆகஸ்ட்: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது கட்சியிலிருந்து விலகிய காங்கிரஸ் தலைவர் எச்.என்.பகுகுணா, இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில் 112 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 333 எம்.பி-க்கள் அதனை எதிர்த்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

22. 1987, டிசம்பர்: சி.மாதவ ரெட்டி என்பவர் ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

23. 1992, ஜூலை: நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராக பா.ஜ.க-வின் ஜஸ்வந்த் சிங்கால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடுமையான போட்டி நிலவிய வாக்கெடுப்பில், 225 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 271 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களிக்க இறுதியில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

24. 1992, டிசம்பர்: இந்த முறை நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராக வாஜ்பாய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். சுமார் 21 மணிநேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில், 111 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவும், 336 எம்.பி-க்கள் எதிர்ப்பும் தெரிவிக்க, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

வாஜ்பாய்

25. 1993, ஜூலை: மூன்றாவது முறையாக நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராக, அஜோய் முகோபாத்யாய்வால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் வாக்கெடுப்பில், 18 மணிநேர விவாதத்துக்குப் பிறகு, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 265 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு எதிராகவும், 251 எம்.பி-க்கள் ஆதரவாகவும் வாக்களிக்க தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

26. 2003, ஆகஸ்ட்: வாஜ்பாய் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். 21 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில், 189 எம்.பி-க்கள் தீர்மானத்தை ஆதரித்தும், 314 எம்.பி-க்கள் எதிர்த்தும் வாக்களிக்க தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

27. 2018, ஜூலை: தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீனிவாஸ் கேசினேனியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். 11 மணிநேர விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 135 எம்.பி-க்கள் தீர்மனத்துக்கு ஆதரவாகவும், 330 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இறுதியில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களின் நீட்சியாக தற்போதும் `நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டவரப்பட்டிருக்கிறது… என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!!!

from Tamilnadu News https://ift.tt/NwjKV0B