பா.ஜ.க ஆளும் மணிப்பூரில், மே 3-ம் தேதி முதல் பழங்குடியல்லாத மைதேயி மற்றும் பழங்குடியான குக்கி ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்துகொண்டிருக்கும் வன்முறை நாடளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஜூலை 19-ம் தேதி, குக்கி இன பெண்கள் இருவர் மைதேயி இன ஆண்கள் குழுவால் நிர்வாணமாக சாலையில் இழுத்துச்செல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூர்

பிறகு இதுகுறித்த விசாரணையில், மே 4-ம் தேதியே நடந்த இந்த சம்பவத்தில் அந்த இரு பெண்களும் கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர் என்றும், இது வழக்கும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரியவந்தது. வீடியோ வெளியான அடுத்த நாள் (ஜூலை 20) தான் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதனால், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும், விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இதுவரையில் பா.ஜ.க அரசு இதற்கு செவிசாய்க்காததால், எதிர்க்கட்சிகள் இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பக்கம் சென்றிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வீடியோ வெளியிட்டது சதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “மே 4-ம் தேதி நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபரை அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அன்றைய நாளில் வீடியோ வெளியிடப்பட்டதில், மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான சதி இருப்பதாகத் தெரிகிறது.

அமித் ஷா – மணிப்பூர் விவகாரம்

மேலும், மணிப்பூரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் தொடர்பாக இரண்டு வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவை மியான்மரில் கடந்த 2022-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பதிவு என்பதும் தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே ஆறு வழக்குகள் சிபிஐ-க்கு அனுப்பப்பட்டிருந்தன. இப்போது ஏழாவது வழக்கு ஒன்று விசாரணையில் இருக்கிறது. அதோடு, மூன்று வழக்குகள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் வழக்கின் நடுநிலைத்தன்மைக்காக விசாரணைகளை, மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/SqFBmHp