டெரிக் ஓ பிரையன்:
நடப்பு நாடாளுமன்ற தொடரில், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன், மத்திய பாஜக அரசுக்கு, தன் கேள்விகளால் நெருக்கடியை கொடுத்து வருகிறார். யார் இவர்… இவரின் பின்னணி என்ன?!

கொல்கத்தாவில் பிறந்த டெரிக் ஓ பிரையன், ஐரிஷ் குடும்பத்தை பின்னணியாக கொண்டவர். இவரின் தந்தைவழி மூதாதையர் அயர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். அவர்கள் பெங்காலி சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு இந்தியாவிலேயே குடியேறினர். டெரிக் ஓ பிரையன் இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த நீல் ஓ பிரையனின் மகன் ஆவார். அவரின் தாத்தா அமோஸ் ஓ பிரையன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றிய முதல் கிறிஸ்தவர் ஆவார். நீல் ஓ பிரையனின் மூன்று குழந்தைகளில் டெரிக் ஓ பிரையன் மூத்தவர்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கலைப் படிப்பை முடித்த டெரிக் ஓ பிரையன், Sportsworld இதழில் பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின் Ogilvy என்கிற விளம்பர நிறுவனத்தில் கிரியேட்டிவ் பிரிவின் தலைவராக டெல்லி, கொல்கத்தா யூனிட்களை கவனித்து வந்தார். அதேநேரத்தில் வினாடி வினா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க தொடங்கினார். தற்போது, ஆசியாவின் சிறந்த வினாடி வினா மாஸ்டர், டெரிக் ஓ பிரைன் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.

பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்ட Bata North Star Quiz, Maggi Quiz, Bournvita Quiz Contest போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர் ஒரு வினாடி வினா மாஸ்டராக பிரபலமானார். இந்தியத் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக இயங்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான Cadbury Bournvita Quiz Contest இன் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம், அவர் பல ஆண்டுகளாக இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகளில் கேம் ஷோவின் சிறந்த தொகுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான டெரிக் ஓ பிரையன், மம்தா பானர்ஜியின் அரசியல் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, 2004-ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இணைந்த உடனே அவருக்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் மேற்கு வங்கத்தை ஆண்ட இடதுசாரிகளின் ஆட்சியில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான மம்தா-வின் போராட்டத்தின் போது டெரிக் ஓ பிரையானும் ஓர் அரசியல் ஆளுமையாக தேசிய ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்தார். திரிணாமுல் காங்கிரஸ் சமூக ஊடகங்களில் கோலோச்ச முக்கிய காரணியாகவும் டெரிக் ஓ பிரையான் செயல்பட்டார்.

2011-ல், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஓ பிரையன் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார். 2012-ல் திரிணாமுல் காங்கிரஸ் அவரை ராஜ்யசபாவில், அக்கட்சியின் தலைமை கொறடாவாக நியமித்தது. இதனையடுத்து 2017-ல் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வானார். அந்த சமயத்தில் 2017 முதல் 2019 வரை போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக நீடித்து வருகிறார்.
2015-ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸின் தலைமை தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார் டெரிக் ஓ பிரையான். நாடாளுமன்ற விவாதங்களின் போது திரிணாமுல் காங்கிரஸின் முகமாக இருந்து, விவசாய சட்டங்கள், சிஏஏ, பணமதிப்பிழப்பு, ரயில்வே என பல சர்ச்சைக்குரிய மசோதாகள், சட்டங்கள் குறித்த விவாதங்களில் கடுமையாக செயலாற்றியிருக்கிறார். அதோடு பல்வேறு விவாதங்களையும், கேள்விகளையும் முன் வைத்து வருகிறார்.

அரசியல், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எழுத்தாளராகவும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது புத்தகங்களில் அதிக கவனம் ஈர்த்தது , இன்சைட் பார்லிமென்ட்: வியூஸ் ஃபார் தி ஃப்ரண்ட் ரோ. மேலும் டெரிக் இன்ட்ரடுஸ் தி கான்ஸ்டிடியூஷன் அண்ட் பார்லிமென்ட் ஆஃப் இந்தியா, மை வே, ஸ்பீக் அப் ஸ்பீக் அவுட், மற்றும் பல குறிப்புகள், வினாடி வினா, பாடப் புத்தகங்கள் என பலவற்றை எழுதியுள்ளார். இதோடு பல சர்வதேச கல்வி நிலையங்களில் சிறப்புரை ஆற்றி வருகிறார். சமீபத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்றத்தில் தன் கேள்வி கேள்வி கணைகளால மோடி அரசை துளைத்து வருவதன் மூலன் தொடர்ந்து தேசிய கவனம் பெற்று வருகிறார்.
from Tamilnadu News https://ift.tt/vEu6FbQ
