மும்பையில், 1980-களில் தத்தா சாமந்த் என்றால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அஞ்சி நடுங்கினர். தொழிற்சங்கத்தலைவர் தத்தா சாமந்த் மும்பையில் ஏராளமான கம்பெனிகள் மற்றும் மில்கள், தொழிற்சாலைகள் மூட காரணமாக இருந்தார். மில் தொழிலாளர்கள் 1982-83-ம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கும் மேல் போராட்டம் நடத்துவதற்கு தத்தா சாமந்த் காரணமாக இருந்தார். தத்தா சாமந்த்திற்கு பயந்தே அதிகமாக தொழிற்சாலைகள் மும்பையில் இருந்து வேறு இடங்களுக்கு சென்றன. இறுதியாக குர்லாவில் உள்ள பிரிமியர் கார் கம்பெனி தொழிற்சங்க பிரச்னையில் மூடப்பட்டது. இதில் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தத்தா சாமந்த் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான், மும்பை பவாய் என்ற இடத்தில் தத்தா சாமந்த் தனது பங்களாவிற்கு வெளியில் காரில் சென்ற போது காரை மடக்கி 5 பேர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர். சைக்கிளில் வந்த ஒருவர் கார் முன்பு வந்தார். உடனே தத்தா சாமந்த் காரை நிறுத்தினார். அந்த நேரத்தில் 5 பேர் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இப்படுகொலை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1997-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி நடந்த இப்படுகொலை தொடர்பாக மும்பை, கோலாப்பூர், அகமதாபாத் போன்ற இடங்களில் இருந்து பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சோட்டாராஜன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டான்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட் 2000-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி கண்பத், விஜய், அருண் லோண்டே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதே சமயம் இவ்வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர். 2009-ம் ஆண்டு சோட்டா ராஜன் கூட்டாளியான விக்ரமும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். 2015-ம் ஆண்டு சோட்டாராஜன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
அவன் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோட்டாராஜன் மீதான 70க்கும் மேற்பட்ட வழக்குகளை சி.பி.ஐ தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளது. பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டாராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தத்தா சாமந்த் படுகொலை தொடர்பாக சோட்டாராஜன் மீது 2019-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மும்பையில் உள்ள சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் சோட்டா ராஜன் சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அதில் 1986-ம் ஆண்டில் இருந்து 1993-ம் ஆண்டு வரை தான் துபாயில் இருந்ததாகவும், தத்தா சாமந்த்தை தனக்கு தெரியாது என்றும், தன் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்தான்.
இதையடுத்து இவ்வழக்கில் சோட்டா ராஜனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கோர்ட் விடுதலை செய்துவிட்டது. சோட்டாராஜன் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் மற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனே சிறையில் இருந்து வெளியில் வர முடியாது. தத்தா சாமந்தின் தொழிற்சங்கத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். தத்தா சாமந்த் சொன்னால் உடனே மும்பையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் அளவுக்கு மிகவும் செல்வாக்குடன் இருந்தார். தனது சொந்த செல்வாக்கில் 1984ம் ஆண்டு மும்பையில் மக்களவை தேர்தலில் போட்டி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/gIn7Ry2
