ராஜபாளையத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் ராஜபாளையத்தில் பிரபல தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் விபத்து வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாலசுப்பிரமணியன் வந்திருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் பாலசுப்பிரமணியன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த நீதிபதி, உதவியாளர் மூலமாக ‘நீதிமன்ற வளாகத்துக்குள் செல்போன் பேசக்கூடாது’ எனும் தகவலை மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார்.

செல்போன் வீடியோ

இதனால் அங்கிருந்து வேகமாக வெளியேறிய மருத்துவர் பாலசுப்பிரமணியன், சிறிதுநேரம் கழித்துவந்து, ‘தனக்கு வேறு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டி இருக்கிறது. மேலும் முக்கியமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆகவே, நான் சாட்சியாக ஆஜராக உள்ள வழக்கை விரைவில் விசாரிக்குமாறு நீதிபதியிடம் நேரடியாக முறையிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நீதிபதி, `நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போது இவ்வாறு குறுக்கிடுவது தவறு. நீங்கள் நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறீர்கள். உங்களது செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பிற்கு உரியது’ என கண்டித்துள்ளார்.

இதனால் மருத்துவர், நீதிமன்றத்திலிருந்து வெளியேறி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க பாலசுப்பிரமணியனை நீதிபதி அழைத்தபோது, அவர் வரவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மருத்துவர் பாலசுப்பிரமணியனுக்கு வாரன்ட் பிறப்பித்து நீதிபதி ப்ரீத்தா உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்கவந்த மருத்துவருக்கு வாரன்ட் பிறப்பித்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

from Tamilnadu News https://ift.tt/nFCufEb