கர்நாடக மாநிலம், உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர், தங்கள் கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா வைத்து சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தங்கள் ஆண் நண்பர்களுக்கு அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த 3 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மாணவிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவிகளும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில வலதுசாரி குழுக்கள் மற்றும் பா.ஜ.கவினர் இணைந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் சமூக ஊடகங்களில் இதை `ஜிகாத்’ உடன் ஒப்பிட்டு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உடுப்பி வீடியோ எனப் பெயரிட்டு பல பொய்யான வீடியோக்கள் இணையத்தில் உலா வருவதாக காவல்துறை தரப்பில் கூறபட்டுள்ளது. மேலும் இந்த விவகாரதத்தில் ஆதாரமற்ற பல தவறான வதந்திகள் பரவுவதாகவும், அதை நிறுத்த வேண்டும் எனவும் உடுப்பி போலீஸார் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
`கல்லூரியில் ரகசியமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்த வீடியோவும் எங்களுக்கு வரவில்லை, இது தொடர்பான புகார்களும் வரவில்லை’ என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரும் கல்லூரி நிர்வாகத்துடன் விவாதித்து எந்த வழக்கையும் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். கல்லூரி விதிகளின்படி மாணவிகள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
`அடுத்த முறை இதுபோன்ற பிரச்னைகள் தொடர்பான தகவல்களை மக்கள் தாமாக முன்வந்து எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். விவரங்களை சேகரிக்கவும் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம்’ என உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளர் ஹக்கே அக்ஷய் மச்சிந்திரா தெரிவித்துள்ளார்.
from Tamilnadu News https://ift.tt/fAZEhvL
