விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்… அக்கட்சியின் நிர்வாக வசதிக்காக, கட்சி ரீதியாக மாவட்டங்களை கூடுதலாக பிரித்து கடந்த 26-ம் தேதி புதிய மாவட்டச் செயலாளர்களை அறிவித்திருந்தார். அதன்படி, கட்சி ரீதியாக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 

மூன்று புதிய மாவட்ட செயலாளர்கள் – கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளராக சேந்தநாடு அறிவுகரசு,  வடக்கு மாவட்ட செயலாளராக வேல்.பழனியம்மா மற்றும் தெற்கு மாவட்ட செயலாளராக இரா.மதியழகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதில், வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள வேல்.பழனியம்மா, தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். இந்த பெண் நிர்வாகிக்கு எதிராக, அம்மாவட்ட வி.சி.க நிர்வாகிகளே ஒன்றிணைந்து, மறுதினமே (27.07.2023) தீர்மானம் இயற்றியுள்ள சம்பவம், மாவட்ட வி.சி.க-விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரிஷிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றியங்களை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்ட இந்த வடக்கு மாவட்டத்தில்… சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதிகளில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய வி.சி.க நிர்வாகிகள், புதிய பெண் மாவட்ட செயலாளருக்கு எதிராக தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.

இதுகுறித்து சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தலித் சந்திரனிடம் பேசினோம். “சங்கராபுரம், ரிஷிவந்தியத்தை பார்த்தீர்களானால், இது மிகப்பெரிய சாதிய மன நோயாளிகள் இருந்த பகுதி. அதிலும் சங்கராபுரம் எப்போதும் நெருக்கடியாக இருக்கக்கூடிய பகுதி. நாங்களெல்லாம் கிட்டத்தட்ட 28 ஆண்டு காலமாக இங்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் அரசியல் அனுபவம் வாய்ந்த, முதிற்சியான பொறுப்பாளர்கள் இருந்தால் மட்டும்தான் அரசியல் பண்ண முடியும். மாவட்டச் செயலாளராக மகளிர் ஒருவர் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்றிருக்க வேண்டும்தான். ஆனால், இந்த பகுதியில் அனுபவம், துணிச்சல் மிக்க நல்ல பொறுப்பாளர் இருந்தால்தான் எங்களுக்கு சரியாக இருக்கும். பல்வேறு வழக்குகளை சந்தித்திருக்கிறோம். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பிரச்னைகள் என தினம் தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே அதிகப்படியான பிரச்னைகளை சந்தித்த பகுதி சங்கராபுரம்தான்.

தீர்மானம்

இந்த பகுதியில் மிகப்பெரிய போராளிகள் எல்லாம் இருக்கும்போது, தலைவர் இங்கே மகளிரை அறிவித்திருக்கிறார்கள். என்ன காரணம் என தெரியவில்லை! அது எங்களுக்கு நெருடலாக இருக்கிறது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சிக்குள்ளாக தீர்மானம் போட்டிருக்கிறோம். அதேபோல் பழனியம்மா கட்சிக்கு வந்தே நான்கு வருடத்திற்குள்ளாக தான் இருக்கும். அதனால், ‘இவர்களை கட்சியைவிட்டு எடுங்கள்’ என நாங்கள் சொல்ல வரவில்லை. கட்சியில் போராளிகளாக உழைத்த நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, அவர்களுக்கு பொறுப்பை கொடுங்கள் என கேட்கிறோம். 

தொல்.திருமாவளவன் எம்.பி

இந்த தீர்மானத்தை தலைவரின் முன்னணி பொறுப்பாளர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். இது மட்டுமின்றி, தற்போது தெற்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதியழகனும், பழனியம்மாவும் ஒரே ஒன்றியத்தில் வசிப்பவர்கள். அப்படியானால் சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதிகளில் ஆட்களே இல்லையா..! இந்தப் பகுதிகளில் களமாடிய தோழர்களையும் கவனத்தில் கொண்டிருக்கலாமே என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/tL3CPG7