ே234 தொகுதிகளிலும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை ஜூலை 28-ஆம் தேதி, ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதனையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “அண்ணாமலை மேற்கொள்ளப்போகிற இந்த நடைப்பயணமானது, தமிழ்நாட்டின் குடும்ப ஆட்சியை ஒழிக்கப் போகிறது. தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான நடைப்பயணம் இது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக நடத்தப்படுகிற நடைப்பயணம் இது” என்றார்.
சமீபத்தில் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையாகி, அதிமுகவினருக்கும் அண்ணாமலைக்கும் இடையே மிகப்பெரிய மோதல்போக்கு உருவான சூழலில், “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிக்கால ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவருவதற்காக நடத்தப்படும் நடைப்பயணம் இது” என்றும் அமித் ஷா கூறியது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸையும் அமித் ஷா வழக்கத்தை விட கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பதும் கவனிப்பை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டாலினுக்கும் ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் மக்களிடத்தில் வாக்கு சேகரிக்க செல்லும்போது அவர்களுக்கு காமன்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், இஸ்ரோ ஊழல்தான் நினைவுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். அப்போது திமுக அவர்களோடுதான் கூட்டணியில் இருந்தது” என்றார்.
தமிழ்நாடு அரசு நாட்டிலேயே, உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது என்று சாடிய அமித் ஷா, “ஊழல் வழக்கிலே ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு இப்போதும் சிறையில் இருக்கிறார். அவரை இன்னும் அமைச்சராக வைத்திருக்கிறீர்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின் அவர்களே…சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா? அவர் இந்நேரம் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? ஆனால் ஸ்டாலின் செய்ய மாட்டார். ஏனென்றால் அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டால் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார். அதனால் வாங்காமல் இருக்கிறார். திமுக அரசைப் பற்றி அண்ணாமலை ஒரேயொரு ட்வீட் போட்டால் திமுக ஆட்சிக்கு பூகம்பே ஏற்படுகிறது. அவர்கள் செய்த பல கோடி ரூபாய்க்கான ஊழல் இப்போது வெளிவந்திருக்கிறது. அண்ணாமலையின் ஒரு ட்வீட்டிற்கே பூகம்பம் வருகிறது என்றால், நடைப்பயணம் முடியும்போது என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்” என்றார்.

“எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அவர்கள் குடும்பத்தை வளர்க்க வேண்டுமென்பதுதான் நோக்கம். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும். ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும். லாலு பிரசாத்திற்கு தேஜஸ்வியை முதல்வராக்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனை முதல்வராக்க வேண்டும். உத்தவ் தாக்கரேவுக்கு அவரது மகனை முதல்வராக்க வேண்டுமென்று விருப்பம்” என்று வாரிசு அரசியல் குறித்தும் அமித் ஷா சாடினார்.
கடந்தமுறை அமித் ஷா வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுச் சென்ற, சில நாட்களிலேயே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்து கைது செய்யப்பட்டார். இம்முறை அமித் ஷா நேரடியாக திமுக அரசு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால், அரசியல் ரீதியாக விவாதத்தை துண்டியிருக்கிறது.
மறுபக்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமித் ஷா-வின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசினார்.
“‘இந்தியா’ கூட்டணி. இந்தியா என்ற பெயரைக் கேட்டால், சிலர் பதறுகிறார்கள். எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி. திமுக ஆட்சி கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக நடத்துவது பாதயாத்திரை அல்ல, பாவ யாத்திரை. குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்ததற்கும், தற்போது மணிப்பூரில் நடந்துகொண்டு இருப்பதற்கும் மன்னிப்புக் கேட்கும் பாவ யாத்திரை.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியுள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள், இது குறித்து பிரதமரிடம் அமித் ஷா கேட்பாரா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப் போகிறது. மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள்தான். 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேச உரிமை உள்ளதா?” என்று மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் களம் இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது என்பதை இருதரப்பு விமர்சனங்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம். “அமித் ஷா-வின் வருகை பாதயாத்திரை தொடங்கி வைப்பதற்காக என்றாலும், தேர்தல் பிரசாரத்திற்கான தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிவார் என பேச்சுக்கள் அடிபடும் நிலையில், அங்கே பாதயாத்திரையை தொடங்கியிருப்பதும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. அண்ணாமலைக்கு டெல்லியின் ஆசிர்வாதம் இருக்கிறதா இல்லையா என்பதையும் விளக்கும் விதமாக அமித் ஷா-வின் பேச்சு இருந்தது.

அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டாலே திமுக அரசுக்கு பூகம்பம் வருகிறது அமித் ஷா கூறியிருப்பது, அண்ணாமலை பாஜகவில் முக்கியமான தலைவர் என்பதாகவே அமித் ஷா-வே கொடுத்திருக்கும் விளக்கமாகத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் திமுக பைல்ஸ்-2 எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வேறு கதை. அதேபோல, செந்தில் பாலாஜி மீது குற்றம் இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் பதவியை தானாக இழக்கப் போகிறார். பாஜகவில் இருப்பவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறதே? 2016-இல் திமுக, அதிமுக போல ஊழல் கட்சிகள் இல்லை என பேசியவர் அமித் ஷா. ஆனால் இப்போது ஜெயலலிதாவை பாராட்டிப் பேசியிருக்கிறார். எனவே முழுக்க அரசியல் பிரசாரம்தான். எதிர்க்கட்சிகள் 70,000 கோடி ஊழல் செய்திருக்கிறது என்றால் 9 ஆண்டுகள் மத்தியில் பாஜகதானே ஆட்சியில் இருந்தது? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்று இதுவரை ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளிக்கும் வகையில் மிகப்பெரிய பட்டியலை அமித் ஷா வாசித்தார். ஆனால் அரிசி கொடுத்தது, குடிநீர் குழாய் கொடுத்தது, கேஸ் இணைப்பு கொடுப்பதெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் கடமை. அதை சாதனைபோல சொல்ல முடியாது. வர்தா, கஜா போன்ற பேரிடர்கள் வந்தபோது மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. இதுபோன்ற பேரிடர் நிதி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும் கொடுக்கப்படுவது பாரபட்சம்தான். ஆனால் அதுபற்றி எல்லாம் அமித் ஷா பேசப்போவதில்லை.” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/Z1TPejr
