`அரசு ஊழியர்களின் நலன் கருதி ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். தந்தைகளுக்கு ஒரு மாத விடுப்பு வழங்கப்படும்’ என்று சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.

இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள சிக்கிம், இந்தியாவின் மிகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம். இங்கு மொத்தமாக 6.32 லட்சம் மக்களே வசிக்கின்றனர். மாநிலத்தின் மக்கள் தொகையை அதிகரிக்கவும் பழங்குடி சமூகங்களின் கலாசாரத்தை காக்கவும், மாநில அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது சிக்கிம் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான அரசு உள்ளது.

இந்த நிலையில், மாநில சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், அரசு ஊழியர்களை `மாநில நிர்வாகத்தின் முதுகெலும்பு’ என்று பாராட்டினார். அத்துடன், ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு, அதேபோல் தந்தைகளுக்கு ஒரு மாத விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த விடுப்புகளை அமல்படுத்துவது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமலில் உள்ள மகப்பேறு விடுப்பு விதி, 1961-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மகப்பேறு நன்மை சட்டத்தின்படி, பணிபுரியும் பெண்களுக்கு முதல் 2 குழந்தைகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அல்லது 26 வார விடுப்பு முழு ஊதியத்துடன் வழங்க வழிவகை செய்கிறது. 2 குழந்தைகளுக்கு பிறகு, அடுத்தடுத்த பிறக்கும் குழந்தைகளுக்கு 3 மாதங்கள் அல்லது 12 வாரங்கள் விடுப்பு முழு ஊதியத்துடன் வழங்கப்பட்டு வந்தது. குழந்தை பிறப்புக்கு 6 மாதத்திற்கு முன் ஆண்கள் 15 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய தந்தைவழி விடுப்பு எடுக்கலாம்.

கர்ப்பிணி

சிக்கிம் அரசு, 2 அல்லது 3 குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் ஊதிய உயர்வுகளை வழங்குகிறது. இத்திட்டம் மாநிலத்தின் பூர்வீக சமூகங்களில் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மே மாதத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் சிக்கிம் மாநிலத்தின் அடையாளச் சான்றிதழ் கொண்டுள்ள ஊழியர்களின் குடும்பங்களுக்கு 2 அல்லது மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒரு கூடுதல் ஊதிய உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே ஊதியத்துடன் கூடிய 12 மாத கால மகப்பேறு விடுப்பு திட்டம், 2021-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

– மித்தேஷ் கோ. கி

from Tamilnadu News https://ift.tt/AeaUpli