மதுரை மாநகர் பாமக அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த அன்புமணி ராமதாஸ், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், “ஸ்டெர்லைட் ஆலையை விட நூறு மடங்கு பெரிய பிரச்னை என்.எல்.சி. தமிழக அரசு என்.எல்.சி-க்கு ஏஜென்ட் போல செயல்படுகிறது. நானும் டெல்டாகாரன்தான் என்று சொன்னால் மட்டும் போதுமா? என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். இல்லையென்றால் ஆட்சிக்கு பிரச்னை உருவாகும்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஒரு வாரத்தில் நீட் ரத்து, மாத மாதம் மின் கணக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம் என வாக்குறுதி அளித்தீர்கள், ஜாக்டோ ஜியோ திமுக-வுக்கு ஆதரவு அளித்தது. ஆனால், தற்பொழுது திமுக அரசு அவர்களுக்கு நாமம் போட்டு விட்டது.
திமுக அரசு தங்களது பிரதான தேர்தல் வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும். வேளாண் சார்ந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள், விளை நிலங்களை கையகப்படுத்தாதீர்கள், காப்பாற்றுங்கள். விவசாயிகளுக்கும் , விவசாய நிலங்களுக்கும் அரசு அரணாக இருக்க வேண்டும், ஆனால், தமிழக அரசு, விவசாய நிலங்களை ஆக்கிரமித்து பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து வருகிறது. அங்குள்ள அமைச்சர்களும் காவல்துறையினரும் என்எல்சியின் பணியாளர்கள்போல செயல்படுகின்றனர்.
தமிழகத்திற்கு தேவையான 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் என்எல்சியின் பங்கு 800 மெகாவாட் மட்டும்தான். தூத்துக்குடியில் என்எல்சி யும் TANGEDCO-வும் இணைந்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின்சார உற்பத்தி செய்கிறது, அதுபோல இங்கும் செய்யலாம்.
நானும் டெல்டாகாரன்தான் என்று முதலமைச்சர் சொன்னால் மட்டும் போதுமா? அப்படி சொன்னவர், டெல்டா மாவட்டத்தை பாதுகாப்பது கடமை அல்லவா?

விவசாயத்தை அழித்துவிட்டு சோற்றிற்கு என்ன செய்வீர்கள் என கண்ணீர் விட்டு நீதிபதி அவ்வளவு கேட்டும், மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் வேலையை அரசு தொடங்கிவிட்டது. திமுக அரசு விவசாயிகளின் எதிரி என்பதை எல்லா விவசாயிகளும் உணர்ந்து இருக்கிறார்கள். மண்ணுக்கும் மக்களுக்கும் பாமக எந்த தியாகத்தையும் செய்ய செய்ய தயாராக உள்ளோம்.
என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுப்பதன் மூலம் என்எல்சி நிறுவனத்தை வாங்க உள்ள தனியார் நிறுவனத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
ஸ்டெர்லைட் பிரச்னையை விட நூறு மடங்கு பெரிதானது என்.எல்.சி பிரச்சனை. இது வளர்ச்சி திட்டம் கிடையாது, மண்ணையும் வாழ்வையும் அழிக்கும் திட்டம்.
அன்னூர் சிப்காட் கொண்டு வர 3000 ஏக்கர் தரிசு நிலத்தை கையகப்படுத்தப்பட்டபோது அதனை கூடாது என அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டது. அங்கே சிப்காட் வந்தால், 20,000 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்குமே ஏன் தடுத்து நிறுத்தீனீர்கள், அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா?
சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும், டெல்லியில் சென்று வாதிட்டு என்எல்சி விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் தமிழர்கள் பணியாற்றுகிறார்கள் என அண்ணாமலை கூறுகிறார். தமிழர்கள் என்எல்சி அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலையில்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தங்கம் தென்னரசுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது, மின்சாரத்துறை அமைச்சர் என்பதால் அதனுடைய விளைவுகள் தெரியாமல் பேசி வருகிறார், இது தங்கம் தென்னரசுடைய பிரச்னை கிடையாது தமிழகத்தின் பிரச்னை.
என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உடனே தலையிட வேண்டும். மூன்று தலைமுறைகளை என்எல்சி நாசப்படுத்தி வருகிறது.
இந்த அரசு மதுவை விற்கவில்லை, மதுவை திணித்து வருகிறார்கள், அதி வேகமாக மதுவை திணிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நினைத்தார். டாஸ்மாக் கடைகள் மூடப் போவது எப்போது என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. தலைமுறையை அழிக்கின்ற இப்பிரச்னையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்.
2026-ல் தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம். அதற்கான காலம் நேரம் வரும்போது சொல்வோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/spulY8t
