மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் மற்றும் கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக மத்திய மாநில பா.ஜ.க அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க விரும்புகிறது எனப் பேசியதும், மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச தி.மு.க., காங்கிரஸுக்கு என்ன அருகதை இருக்கிறதென சீமான் கேள்வி எழுப்பியிருப்பதும் பெரும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

சீமான்

ஆர்ப்பாட்ட நிகழ்வில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கானா, இடும்பாவனம் கார்த்திக் உட்பட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பா.ஜ.க-வைக் கண்டித்துப் பேசிய பிறகு இறுதியாக மைக் பிடித்த சீமான் “மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க அரசு விரும்புகிறது.

அதனால் மணிப்பூரில் கலவரம் நடக்கிறது. ஏன் விரும்புகிறார்கள் என்றால் கலவரம் நடத்தியே கட்சி வளர்த்து ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அன்று குஜராத்தில் நடந்தது. இன்றைக்கும் காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூர் கலவரத்தின் நோக்கம் என்பது வளக் கொள்ளைதான்.

மணிப்பூரில் காடுகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு காடுகளிலுள்ள வளங்களைச் சுரண்டி அவர்களுக்குப் பிடித்த முதலாளிகளுக்குக் கொடுப்பதே. மணிப்பூரில் மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்கள், அவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். மைதேயின மக்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஏற்கக்கூடியவர்கள். பா.ஜ.க-வின் வாக்காளர்கள். ஆகையால், பழங்குடியின மக்கள் சாவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை” எனப் பேசிப் பரபரப்பை கிளப்பினார்.

சீமான்

பா.ஜ.க-வை விளாசிய சீமான் ஒருகட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மீதும் பாய்ந்தார். “குஜராத் கலவரம் நடந்தபோது அதை ஆதரித்துப் பேசிய கட்சி தி.மு.க. குஜராத் கலவரத்தின்போது காங்கிரஸ் போராடிய போராட்டங்கள் எத்தனை… ஈழத்தில் பெண்களுக்கு எதிராக நேர்ந்த கொடுமைகள் பற்றிப் பேசாத இந்த தி.மு.க., காங்கிரஸ் மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசுகிறார்கள். மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது” என வினவினார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், அரசியல் லாபத்துக்காகத் திட்டமிட்டு மணிப்பூர் கலவரம் நடத்தப்படுவதாகவும், மத்திய அரசு நினைத்திருந்தால் கலவரத்தை எளிதாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் முன்வரவில்லை எனச் சாடினார் சீமான்.

from Tamilnadu News https://ift.tt/0UiAKOf