டெல்லி அவசரச் சட்டம் நேற்று, நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “டெல்லி அரசு தனது ஊழல்களை மறைக்கவே டெல்லி அவசரச் சட்ட மசோதாவை எதிர்க்கிறது. தேசிய தலைநகரான டெல்லியில் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

அதனடிப்படையில், டெல்லிக்கான சட்டங்களைக் கொண்டுவரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. நமது அரசியலமைப்பு விதிகளிலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும் டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணி பற்றி மட்டும் கவலைப்படாமல், டெல்லிமீது அக்கறை கொள்ள வேண்டும். நீங்கள் என்னத்தான் கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவார்” எனக் கூறினார்.
அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அவசரச் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டெல்லி மசோதா வெற்றிப் பெற்றால் அது I.N.D.I.A கூட்டணியின் வெற்றியைக் குறிக்கும் என்று அமித் ஷா மறைமுகமாகக் கூறியிருப்பது சரிதானே… இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் நாங்கள், புதிதாகக் கூட்டணி அமைத்திருக்கிறோம். நாடு முழுவதும் நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம்.

நிச்சயமாக, தலைநகர் டெல்லியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைக்கும். டெல்லியில்தானே நாடாளுமன்றம் இருக்கிறது. எனவே, அவர் வேண்டுமென்றே சொன்னாரா அல்லது தவறுதலாக சொன்னாரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், சரியாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா எங்கள் தாய்நாடு, இந்த I.N.DI.A கூட்டணி எங்கள் தாய்நாட்டுக்கானது. அதனால்தான் NDA கூட்டணிக்கு மதிப்பில்லாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் NDA கூட்டணி ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை. ஆனால், எங்கள் கூட்டணியைப் பார்த்ததும் பயந்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
NDA கூட்டணியில் இருந்த பலரும் இப்போது வெளியேறிவிட்டார்கள். தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் இனவாதப் பேரழிவு, வகுப்புவாத பதற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்ற, I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற வேண்டும். பயங்கரவாதத்தை உருவாக்குவது பா.ஜ.க-வின் பாரம்பர்யம். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

இதை நினைத்து சில நேரங்களில் நான் வெட்கப்படுகிறேன். செய்தியாளர்களிடம்கூட ஆளும் அரசைச் சேர்ந்தவர்கள், `நீங்கள் இந்துவா அல்லது முஸ்லிம்களா?’ என்று கேட்கிறார்கள். வகுப்புவாத வன்முறையைத் தவிர வெற்றிபெற வேறு வழியில்லை என்று நினைக்கிறார்கள். காவி நிறத்தை நாம் வெறுக்கிறோம் என்பதல்ல. அது தியாகம் மற்றும் தெய்வீகத்தின் நிறம். ஆனால், அதை இப்போது பயம், கலவரம், சித்ரவதையைக் குறிப்பிடும் நிறமாக மாற்றிவிட்டார்கள். இதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/bN4I9jl
