தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரைக்கு இடையே சிவகங்கையில் பேசும்போது, “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன். டெல்லி போக வேண்டும், அங்கு பதவி பெற வேண்டுமென்ற விருப்பமெல்லாம் எனக்கு இல்லை. அதனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் அரசியல் செய்வேன்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் அண்ணாமலை நடைப்பயணத்தையே தொடங்கினார் எனக் கூறப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை கூறியிருப்பது பா.ஜ.க தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே மே மாதத்திலும் இதே கருத்தை அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், `தலைமை சொன்னதால் தட்டிக் கழிக்க முடியவில்லை, எனவே போட்டியிடுகிறேன்’ அண்ணாமலை கூறுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், போட்டியிடப்போவதில்லை என மீண்டும் அண்ணாமலை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மானாமதுரை தொகுதிகள் நடை பயணத்தில் ஈடுபட்ட போது மண்பாண்டம் செய்வது குறித்து அறிந்து கொண்டார்

தென் மாநிலங்களில் இம்முறை பா.ஜ.க கூடுதல் கவனம் செலுத்தப்போகிறது என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தென் மாநில வியூகம் தொடர்பாக ஹைதராபாத்திலும் கூடி பா.ஜ.க தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம், சாதக- பாதகங்கள் நிறைந்த தொகுதிகள் எவை என்பது பற்றியெல்லாம் ஏற்கெனவே ஆலோசித்திருக்கின்றனர். அமித் ஷா, ஜே.பி.நட்டா எனத் தேசியத் தலைவர்கள் அடிக்கடி தமிழகத்திற்கு வருவதும் இதுதொடர்பாக ஆலோசிக்கவே என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கோவையிலும் நீலகிரியிலும் பா.ஜ.க போட்டியிடுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும், கோவையில் அண்ணாமலையையும் களமிறக்கப்போவதாக தகவல்கள் கசிந்தன. இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இப்படிப்பட்ட சூழலில் போட்டியிட மாட்டேன் என அண்ணாமலை கூறியிருப்பது திடீர் முடிவல்ல என கமலாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்சி, பல மாநிலங்களில் எதிர்க்கட்சி என பா.ஜ.க பலமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இன்னும் பூத் ஏஜெண்டுகளை கூட முழுமையாக நிரப்ப முடியாத நிலையில்தான் இருக்கிறது. கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வை நம்பியே தமிழகத்தில் பா.ஜ.க-வின் வெற்றி, தோல்வி கணக்குகள் இருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம். ஆனால் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வை சீண்டும் விதமாக அண்ணாமலையின் பேச்சுக்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார் அண்ணாமலை. ஏற்கெனவே அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த கோபத்துடன், இதுவும் சேர்ந்து கொண்டதால்தான் ஆர்.பி உதயகுமாரை மட்டும் அந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது.

தொடக்கவிழாவில் கலந்து கொண்ட அமித்ஷா

இந்த நிலையில் பாதயாத்திரைக்கு மத்தியில் திருமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஓ.பி.எஸ்-ஸை நாங்கள் ஒதுக்கவில்லை. அவர் மக்கள் பணி செய்தவர், மக்களுக்காக பாடுபட்டவர். கொடநாடு வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்” என்று கூறினார். இந்த பேச்சு எடப்பாடி தரப்பினரை மேலும் கோபப்படுத்தியிருக்கிறது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “எங்களை பொறுத்தவரையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், “Just like” அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்த மோடிக்கு தெரிந்த அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” என்று பகிரங்கமாக சாடினார்.

இந்த சூழலில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப்போவதில்லை என்ற முடிவு அவராக எடுத்ததாரா அல்லது, கூட்டணிக் கட்சிகளோடு இத்தனை சர்ச்சைகளை சுட்டிக்காட்டி என போட்டியிட வேண்டாம் என டெல்லி மேலிடம் உத்தரவிட்டதா என்று கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஒரு தரப்பினரோ, “அண்ணாமலை என்ன சொல்கிறார், எதற்காகப் பேசுகிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்று எங்களுக்கே பல நேரங்களில் குழப்பமாகத்தான் இருக்கிறது. பாதயாத்திரை என்று சொல்லிவிட்டு, இப்போது பாதியாத்திரைதான் சென்று கொண்டிருக்கிறார். இளம் வயதுதானே தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர் கால்பட்டால் மக்கள் மத்தியில் நல்ல தாக்கம் ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால் பேருந்தை வைத்துக்கொண்டு, அதில் சொகுசு வசதிகளை செய்துகொண்டு, ஒவ்வொரு ஊரிலும் பெயருக்கு சில கிலோ மீட்டர் நடந்தால் அதனால் மக்கள் மத்தியில் என்ன தாக்கம் ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறார் எனத் தெரியவில்லை.

கமலாலயம்

தமிழகத்தில் பா.ஜ.க மட்டும் தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய சூழல் இன்னும் உருவாகவில்லை என்பது தலைமைக்கும் தெரியும். அதனால்தான் அ.தி.மு.க கூட்டணியை விட்டுவிடக்கூடாது என அமித் ஷா நினைக்கிறார். அதற்கு நேரெதிராக அண்ணாமலை இங்கு களத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். இப்போது இருக்கிற சூழலில் அண்ணாமலை போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது சந்தேகம்தான். அவர் தோற்றால் மட்டும்தான் அசிங்கமா? பா.ஜ.க எங்கு தோற்றாலும் அசிங்கம்தானே? பா.ஜ.க தமிழகத்தில் எங்கும் போட்டியிடாது என்று அறிவித்து விடுவாரா? அவர் செய்வது தலைமக்கு அழகல்ல, டெல்லியும் இதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று பொரிந்து தள்ளுகின்றனர்.

ஆனால் கட்சியைப் பலப்படுத்துவதற்காகத்தான் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது. “தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக ஆக்கப்பட்டதை ஒட்டி, மாநிலத் தலைவர் பொறுப்பு 2021-ஆம் ஆண்டு ஜூலையில் அண்ணாமலையிடம் வழங்கப்பட்டது. அண்ணாமலை பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பா.ஜ.க-வில் மாநிலத் தலைவர் பொறுப்புக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். மாநிலத் தலைவர் செயல்பாடுகளில் தலைமைக்கு திருப்தி இருந்தால், ஒருமுறை நீட்டிக்கலாம். ஆக பா.ஜ.க விதிகளின்படி பார்த்தால் கூட அண்ணாமலை இன்னும் 4 ஆண்டுகள் தமிழக பா.ஜ.க தலைவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதே அவரை டெல்லிக்கு அழைக்க வேண்டாம் என்று தலைமை கருதலாம். தமிழகத்திலேயே அவருக்கு தேவை இன்னும் இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க-வில் கூட தலைமை டெல்லிக்கு போக விரும்புகிறார்களா என்ன? இல்லையே… மாநிலத்தில் அரசியல் செய்யதானே விரும்புகிறார்கள்… அதுபோலத்தான் இதுவும்.” என்கின்றனர்.

ஆனால் தி.மு.க-விலும் அ.தி.மு.க-விலும் தலைவருக்கு இத்தனை ஆண்டுகள்தான் பதவிக்காலம் என்ற வரையறை இல்லை. பா.ஜ.க-வில் அந்த வரையறை இருக்கிறதே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.!

from Tamilnadu News https://ift.tt/gMrf4QO