தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதல் கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் நிறைவடைந்துள்ள நிலையில், விண்ணப்பித்த பயனாளிகள் அனைவரது வீடுகளிலும் நேரடி களஆய்வு நடைபெறாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி துவக்கி வைக்கப்படும் இத்திட்டத்திற்கென, ரூ.7 ஆயிரம் கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள்

விண்ணப்பங்கள் பதிவேற்றம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற, ஜூலை 24-ம் தேதி முதல் 3 நாள்கள், ரேஷன்கடை ஊழியர்கள் மூலம் உரிய பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முதல்கட்டமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.

இதுவரை ஏறத்தாழ 79.66 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு நாளை (ஆகஸ்ட் 5) தொடங்கி வரும்16-ம் தேதிவரை நடைபெறுகிறது.

நிராகரித்தால் மேல்முறையீடு செய்யலாம்!

இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு தகுதி அடிப்படையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. தமிழக அரசிடம் உள்ள ஆதார் விவரம், வருமான வரித்துறை, மின்கட்டண தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ நிராகரிக்கப்பட்டாலோ அது குறித்த தகவல், பயனாளியின் மொபைல்போன் எண்ணுக்கு தெரியப்படுத்தப்படும்.

மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அது தொடர்பாக பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்; இதன் மீது வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு நடத்துவர். அந்த நேரத்தில் மட்டுமே வீட்டிற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வினை அதிகாரிகள் மேற்கொள்வர்.

எனவே, விண்ணப்பித்த அனைவரின் வீடுகளிலும் ஆய்வு என்பது நடைபெறாது. மேல்முறையீடு, தவறான தகவல் என்ற சந்தேகம் எழுவதன் அடிப்படையில், விண்ணப்பித்தவர்களில் தோராயமாக 10% பேர் வீடுகளில் ஆய்வு நடைபெறலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

from Tamilnadu News https://ift.tt/guVLGzF