இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா-வை மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவர் படித்த நாகர்கோவில் ராமன்புதூர் லிட்டில் பிளவர் ஸ்கூலில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முன்னாள் எம்.பி-யும் தி.மு.க மகளிரணி செயலாளருமான ஹெலன் டேவிட்சன். மேலும் அவர் ஊருக்கு வரும்போது உறவுகளும், நட்புகளும் பிரம்மாண்ட பாராட்டுவிழா எடுப்பதற்குத் தயாராகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர், வடக்கூர் பகுதியைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா-வின் தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். 5-1-1965-ல் பிறந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டவர்.

கணவர், மகன்களுடன் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் புளோரா

1985-ல் ராணுவ செவிலியர் பணிக்காக தேர்வாகிச் சென்றார். அவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜான் பிரிட்டோ எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜா மரணமடைந்துவிட்டார். அவரும் ராணுவத்தில் பணியாற்றியவர். அன்னம்மாள், டெசி ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜானிடம் பேசினேன், “நான் திருமணம் செய்யும்போது புனேயில் பணியில் இருந்தார். அடுத்ததா கொல்கத்தா, செகந்திராபாத், ஜபல்பூர், சண்டிகர், மும்பை, ஜம்மு காஷ்மீர் வரை வேலை செய்தார். மூன்று வருடத்துக்கு ஒருமுறை அவர்களுக்கு டிரான்ஸ்பர் கொடுப்பார்கள். இப்போது டெல்லியில் பணியாற்றி வருகிறார். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்துகொண்டிருந்தேன். என்னால் அங்கு போகமுடியாத நிலை இருந்தது. எனவே இரண்டு மகன்களையும் என் மனைவிதான் தன்னந்தனியாக வளர்த்தார். பிள்ளைகள் முதலில் தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

கணவர் இக்னேசியஸ் ஜான், மகன்களுடன் மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் புளோரா

டிரான்ஸ்பர் சமயத்தில் மகன்களையும் அழைத்துக்கொண்டு வேறு ஊர், பள்ளியில் சேர்ப்பது என அவருக்கு சிரமம் இருந்தது. அதன் பின்னார் பிள்ளைகள் ஆர்மி ஸ்கூலில் படித்தனர். பக்கத்தில் உறவினர்கள் இல்லாததால் தனியாக கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தார். வருடத்துக்கு இரண்டு மாதம் விடுப்பு இருந்தாலும், அதை முறையாக எடுக்க முடியாத நிலைதான் அதிகம். பணிச் சுமை, குடும்பச் சுமை அனைத்தையும் தனியாக சமாளித்தார். அவரது திறமையால் இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். இப்போது இரண்டு மகன்களும் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்துவிட்டனர்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/T97nrX6