கோவை தனியார் கல்லூரில் நடந்த கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். குஜராத் முதல்வராக இருந்தபோது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா அவரை அழைத்து கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை இருக்கிறது.
கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். இன்று அவரின் நினைவுநாள். காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவுசெய்திருக்கிறேன். கலைஞர் குறித்துப் பேசுவது என்றால் நாள் முழுக்கப் பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள். அவரைப் பற்றி நன்றாகத் தெரியும்.

அவரைப் பற்றி வேறு தளத்தில் பேசலாம். ஃபேஷன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள். இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்படி ஒரு சட்டவிதி இருக்கிறதா… கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும்.
கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே வேளையில் நமது கலாசாரங்களை மறந்துவிட வேண்டாம். கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக வானதி இருக்கிறார், நான் இருக்கிறேன். எல்லாருமே சேர்ந்துதான் செய்ய முடியும். கண்டிப்பாகச் செய்வோம். ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை.

ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது. நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்குப் புடவைதான் எல்லை“ என்றார்.
from Tamilnadu News https://ift.tt/fU8EIXs
