`யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்பது பழமொழி. தேர்தல் வரும் பின்னே, ரெய்டு வரும் முன்னே என்பது புதுமொழி. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், விசாரணை ஆணையங்களின் நெருக்கடிகளும் எதிர்க்கட்சிகளை நெருக்கிக்கொண்டிருக்கின்றன. தவறைத் தட்டிக்கேட்கும் `தன்னிச்சையான’ அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டாலும், நிஜத்தில் பா.ஜ.கவின் கிளை அமைப்புகளைப் போன்றுதான் இவை செயல்படுகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில், ஆம் ஆத்மி, தி.மு.க போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் நியூஸ்க்ளிக் போன்ற செய்தி ஊடகங்களையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து ரெய்டு பிடியை இறுக்கிக்கொண்டிருக்கின்றன இந்த விசாரணை ஆணையங்கள்!

நியூஸ்க்ளிக்

நியூஸ்க்ளிக் மீதான ரெய்டும், கண்டனமும்:

சீனாவுடன் தொடர்புடைய அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் மூலம் வெளிநாட்டு நிதி பெற்றுக்கொண்டு, சீன சார்பு செய்திகள் வெளியிட்டதாக `நியூஸ்க்ளிக்’ செய்தி நிறுவனத்தின்மீது கடந்த செவ்வாய் கிழமை ரெய்டு நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையும், டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையும் இணைந்து, நியூஸ்க்ளிக் அலுவலகம் மட்டுமல்லாமல் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தியது. அவர்களின் செல்போன், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. `பஞ்சாப் விவசாயப் போராட்டம், குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு போராட்டம் போன்றவை குறித்தெல்லாம் செய்தி எழுதினீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அதிகாரிகள் துளைத்தெடுத்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, நியூஸ்க்ளிக் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சீல் வைத்த டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை, நியூஸ்க்ளிக் நிறுவனர், நிர்வாக அதிகாரிகளை கைது செய்து 7 நாள் காவலில் வைத்திருக்கிறது. உச்சபட்சமாக, நிறுவனத்தினர் மீது, பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான `உபா’ (UAPA) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து அதிரவைத்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிக்கொண்டுவந்திருக்கும் அதிர்ச்சியான விஷயத்தால் இன்று நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்பெற வைத்திருக்கிறது. இந்த கோரிக்கையிலிருந்து திசைத் திருப்பவே, நியூஸ்க்ளிக் மீதான இந்த ரெய்டு! எப்போதெல்லாம் பா.ஜ.க சிக்கலை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் திசைத்திருப்பலை ஒரு ஆயுதமாக கையிலெடுக்கிறது!” என குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

நியூஸ்க்ளிக்

அதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “நம் நாட்டில், கருத்துச் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை! இங்குள்ள ஊடகங்கள் தங்கள் பணியை அச்சமின்றி சுதந்திரமாகச் செய்ய முடியும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தவேண்டும். ஆனால், நியூஸ் கிளிக்கிற்கு எதிரான டெல்லி காவல்துறையின் நடவடிக்கை பத்திரைகை சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாக இருக்கிறது. நியூஸ் கிளிக் மீதான நடவடிக்கையை டெல்லி காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “என்னுடன் தங்கியிருக்கும் கட்சித் தோழரின் மகனும் நியூஸ்க்ளிக்கில் பணியாற்றுகிறார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ய வந்தார்கள். அவருடைய லேப் டாப் மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்ன விசாரணை செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இது ஊடகங்களை மூடிமறைக்கும் முயற்சி! இதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை நாடு அறியவேண்டும்!” என கொந்தளித்திருக்கிறார்.

சீதாராம் யெச்சூரி பினராயி விஜயன்

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, “நியூ இந்தியா பத்திரிகையாளர்களை மிகவும் தீவிரமாகக் கையாளுகிறது!” என்றிருக்கிறார். ராஷ்ட்ரீய ஜனாத தளத்தின் எம்.பி. மனோஜ் ஜா, “அவர்களை டெல்லி போலீஸ் என்று ஏன் சொல்கிறீர்கள்? அவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் பணியாற்றுபவர்கள். அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. பா.ஜ.க-வில் இணைய மறுப்பவர்களுக்கு எதிராக இப்படி செய்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கான பலனை அரசு அனுபவிக்கும்!” என குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, “இந்தியா ஜனநாயகத்தின் தாய், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பற்றியெல்லாம் வெளிநாடுகளில் இந்திய அரசாங்கம் பேசுகிறது. அதேசமயம் மீதமுள்ள சுதந்திர பத்திரிகைகள்மீது விசாரணை அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்துகிறது. முதலில் அவர்களை சட்டவிரோதமாக கைது செய்வதும், பின்னர் அவர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கும் தொடந்து நடந்துவருவது குழப்பத்தையே ஏற்படுத்துகிறது!” என அச்சம் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி தலைவர்கள்மீது தொடரும் ரெய்டு:

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில், ஊழல் முறைகேடு செய்ததாகக் கூறி, அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் சுற்றிவளைத்து கைது செய்துவருகிறது. குறிப்பாக நேற்று டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் திடீர் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, அவரை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது. ஏற்கெனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்து, கடும் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுடன் டெல்லி திகார் சிறையில் அடைத்தது சி.பி.ஐ. அதேபோல, ஆத்மியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்மீதும் பண மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக அவரும் சிறையில் இருக்கிறார்.

சஞ்சய் சிங், அரவிந்த் கெஜ்ரிவால்,

விசாரணை அமைப்புகளின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரித்திருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக்கூறி கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் அவர்கள் எதையுமே கண்டுபிடிக்கவில்லை. சஞ்சய் சிங் வீட்டில் நடந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது. மோடி தோல்வியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இதுபோன்ற அவநம்பிக்கையான செயல்களையே நாடுகிறார். அதுதான் இப்போது நடக்கிறது. தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற ரெய்டுகள் அதிகரிக்கும். அமலாக்கத் துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை, காவல் துறை என அனைத்து விசாரணை அமைப்புகளும் முடுக்கிவிடப்படும். சில நாள்களுக்கு முன்னர் நியூஸ் க்ளிக் அலுவலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. இப்போது சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடக்கிறது. இப்படி பல சோதனைகள் நடந்துகொண்டே இருக்கும். இதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/PxkHcne