விலையுயர்ந்த பைக்கில் தொலைதூரம் செல்வதும், பைக் சாகசம் செய்வதும், அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டும் வந்த டி.டி.எஃப்.வாசன், அவரின் பிறந்தநாளன்று அவரைக் காண வந்த அவரது ரசிகர்கள் மூலம் திடீரென தமிழ்நாட்டின் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அதைத் தொடர்ந்து, வேகமாகச் செல்வது, விபத்து ஏற்படுத்தியது, சர்ச்சையான பேச்சு எனப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். மேலும், மஞ்சள் வீரன் என்றத் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

TTF Vasan

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக்கில் செல்லும்போது, சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டுச் சென்ற டி.டி.எஃப் வாசன் மீது, பாலுசெட்டிசத்திரம் காவல்துறை 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, வாசனைக் கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை இரண்டு முறை ஜாமீன் மனு கேட்டு, டி.டி.எஃப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இரண்டு முறையும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு டி.டி.எஃப்.வாசன் தரப்பு மனு அளித்திருக்கிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டி.டி.எஃப்.வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் அவரின் உடல் நலனைக் கருத்தில்கொண்டும், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வேண்டாம் என்று கூறி, ஜாமீன் கேட்டு வாதிட்டனர்.

TTF Vasan

காவல்துறை தரப்பில், “டி.டி.எஃப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். டி.டி.எஃப்.வாசனின் யூடியூபில் அவரை 45 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக்கில், 2 முதல் 4 லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால், அவர் இந்த விபத்தில் உயிர்த்தப்பியிருக்கலாம். இவரைப் பார்த்து பிற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கிக் கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவரைப் பின்பற்றும் சிறுவர்கள் அனைவரும் அதே போன்று உடைகளை அணிந்து வாகனத்தை ஓட்ட வாய்ப்பில்லை, அவரைப் பின்பற்றும், சிலர் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்” என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும். அவரது பைக்கை எரித்துவிட வேண்டும். வாசனுக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் முன்வைத்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/lMQRnio