ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில், இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து, சீமான் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘ ‘10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களை விடுதலைச் செய்யலாம்’ என்ற சட்டத்தைக் கருணாநிதி கொண்டுவந்தார். கேரளாவில் 7 ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றவர்களை விடுதலைச் செய்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு மட்டும் ‘சட்டம்’ பாரபட்சமாக இருக்கிறது. 25 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

சீமான்

தமிழ்நாட்டில் இன்னமும் அவர்கள் விடுதலைச் செய்யப்படாமலிருக்கின்றனர். இந்த நிலையில், தேர்தல் வரும்போதெல்லாம் இஸ்லாமிய சிறைக்கைதிகள்மீது பாசமும், அன்பும் வந்துவிடுகிறது. அவர்களின் முன்விடுதலைக்காக வழக்குத் தொடுத்தபோது, உச்ச நீதிமன்றமே விடுதலைச் செய்ய சொன்னது. ஆனால், இந்த தி.மு.க அரசு விடுதலைசெய்ய மறுத்துவிட்டது. அப்போது, இவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அவர்களுக்குள் எந்த மாறுதலும் இல்லை. வெளியில் வந்தால், இந்து அமைப்பு தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று சொல்லியிருந்தார்கள்.

இது, கொடுமையான நிலைப்பாடு. கேட்டால், ‘இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு’ என்கிறார்கள். காவிரி நீரைப் பெற்றுதர வேண்டும் என்ற நோக்கமும் அவர்களிடம் கிடையாது. காவிரி நீர் குறித்து, தி.மு.க அரசு ஏதாவது பேசுகிறதா… காரணம், கர்நாடகாவை ஆளுகிற காங்கிரஸ் கட்சி தண்ணீர் தர மாட்டார்கள். காவிரி பிரச்னையை வைத்துதான் அங்கு அரசியல் நடக்கிறது. இவர்கள் கேட்டுப் பெறுவதற்கான எந்த இதுவுமில்லை. காவிரியில் தமிழர்களுக்கான உரிமை இருக்கிறதா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்.

சீமான்

‘இது ஒரே நாடு’ என்கிறீர்கள். ஒரே நாடு என்றால், அந்த நாட்டிலுள்ள வளங்கள் அனைத்தும் அந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் பொதுவானதுதானே… தமிழ்நாட்டிலுள்ள என்னுடைய வளங்கள் எல்லாம் பொதுமையாகத்தானே பயன்படுத்தப்படுகின்றன. அப்புறம் ஏன், தண்ணீர் தர மறுக்கிறார்கள். பிறகு, எப்படி இது ஒரே நாடாகும்… எப்படி நாற்றுப் பற்று எல்லோருக்கும் வரும்?

நாடாளுமன்றத் தேர்தலில், ஒரே நிலைப்பாடுதான். நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதற்கான தயாரிப்புதான் இந்த கலந்தாய்வுக் கூட்டம். தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து முடித்துவிட்டோம். இப்போது, வடமாவட்டங்களில் பயணம் செய்கிறோம். இந்த மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பயணம் செய்து முடித்துவிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்யவிருக்கிறோம்.

சீமான்

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவையெல்லாம் ‘தன்னாட்சி அதிகாரம்’ பெற்றது என நினைத்தோம். அரசியல் தலையீடு, அதிகார தலையீடு இருக்காது என நினைத்தோம். ஆனால், இப்போது, அவையெல்லாம் ஆட்சியாளர்களுடைய விரல்களாகிவிட்டன. மோடி விரல் நீட்டினால் நீட்டும். மடக்கினால் மடக்கும். இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி, பி.ஜே.பி-யை எதிர்ப்பதால், பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜெகத்ரட்சகன் திடீரென்று, காலையில்தான் பணக்காரர் ஆனாரா… இதையெல்லாம், ரசித்து சிரித்துக்கொள்ள வேண்டியதுதான். ஒன்றும் செய்ய முடியாது. இது, ஒரு நாடு என்று நினைக்கிறோம். இது நாடல்ல, ஒரு சுடுகாடு’’ என்றார் ஆவேசமாக!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/fxUWQF9