இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த இரண்டு வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. அதேசமயம், காஸா-மீது தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலால் 3,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
போதாக்குறைக்கு நேற்று முன்தினம் காஸா மருத்துவமனைமீதான தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், `இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை ஹமாஸ்தான் நடத்தியது’ என மடைமாற்றிவிடுகிறது இஸ்ரேல். இன்னொருபக்கம், போர் தொடங்கிய அடுத்த நாளே இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை வழங்கத் தொடங்கிய அமெரிக்காவும், மாசுறுத்துவமனைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறுகிறது.
ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள், ஹமாஸின் தாக்குதலை `தீவிரவாத தாக்குதல்’ எனக் கூறி, இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்குச் சென்று அந்த நாட்டின் பிரதமர் நெதன் யாகுவை நேரில் சந்தித்தார்.

அதோடு, டெல் அவிவில், நெதன் யாகுவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதியளித்தார். இந்த நிலையில், பைடன் வந்திறங்கிய அடுத்த நாளே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு வருகை புரிந்திருக்கிறார். இது குறித்து ரிஷி சுனக் தனது ட்விட்டர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “துயரத்தில் இருக்கும் இஸ்ரேலில் நான் இருக்கிறேன். இன்றும் சரி, எப்போது சரி தீவிரவாதத்துக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், இஸ்ரேல் வந்திறங்கியதும் செய்தியார்களிடம் பேசிய ரிஷி சுனக், “எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலிய மக்களுடன் எனது ஒற்றுமையை வெளிப்படுத்த நான் இங்கு வந்திருக்கிறேன். சொல்லொணா, தீவிரவாத செயலால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். இங்கிலாந்தும், நானும் உங்களுடன் நிற்கிறோம் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/FYo4NS6
