அ.தி.மு.க-வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக சங்கரன்கோவிலில் அக்டோபர் 18-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் எம்.எல்.ஏ-வுமான கிருஷ்ணமுரளி செய்து இருந்தார்.

எடப்பாடியிடன் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி

மதுரை மாநாடுக்கு பிறகு தென்மாவட்டத்தில் எடப்பாடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால், அங்கு எடப்பாடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக தேசிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை எடப்பாடி முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிவுக்கு பின்னர், ‘ மத்திய அரசு மீது எடப்பாடி விமர்சனம் வைப்பதில்லை’ என்று குற்றச்சாட்டை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன. அதை ஓரளவு சமாளிக்கும் விதமாக மத்திய அரசு என்று பொத்தம்பொதுவாக எடப்பாடி பேசி இருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகால மத்திய அரசின்மீது திடீரென எடப்பாடி விமர்சனம் வைப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

” சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேசியது நூற்றுக்கு நூறு உண்மைதான். தமிழ்நாட்டை தேசிய கட்சிகள் துரும்பாகதான் நினைக்கின்றன. இருப்பினும் அதிமுக ஆட்சியில் தொடர் அழுத்தம் மற்றும் தொடர் வற்புறுத்தலின் அடிப்படையில் தமிழ்நாடுக்கு தேவையான பல திட்டங்களை கொண்டுவந்தோம். அவர்களாக தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களை தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, நாடாளுமன்றத்தை 20 நாள்களுக்கு மேலாக முடக்கினோம். தற்போது மத்தியில் இருப்பவர்களும் தமிழ்நாட்டின் மீது அக்கறை எடுத்து திட்டங்களை தரவில்லை.

தி.மு.க-வும் 38 எம்.பி-க்களை வைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் கேட்டு பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், தமிழ்நாட்டின் உரிமைக்காக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என்பதைதான் எடப்பாடி சுருக்கமாக பேசி இருக்கிறார்.” என்றார் சூடாக.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம்.

” பா.ஜ.க-வுடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி இருந்த அ.தி.மு.க-வுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு, இப்போது கூட்டணியை முறித்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். தற்போது தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாக நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் எடப்பாடி.

இடும்பாவனம் கார்த்திக்

அவரின் கருத்தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ‘ நாங்கள் ஒரு மாநில கட்சி. இனி தேசிய கட்சியிடம் எந்த காலமும் கூட்டணி வைக்கமாட்டோம்’ என்று எடப்பாடியால் சொல்லமுடியாமா? அவ்வளவு ஏன் தேசிய கட்சி என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறாரே தவிர, பா.ஜ.க., காங்கிரஸ் என்று பெயரைக்கூட சொல்ல தயக்கம் காட்டுகிறாரே. கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும், பா.ஜ.க-வின் நிர்வாகம் மற்றும் கோட்பாடுகளை எடப்பாடி விமர்சிக்கவில்லை. அவர்களின் விமர்சனமெல்லாம் அண்ணாமலையுடன் சுருங்கிவிடுகிறது. கோட்பாடற்ற அரசியல் லாப கணக்குகள் அடிப்படையில்தான் எடப்பாடி பேசுகிறார். மற்றப்படி தமிழ்நாடு மீதும் மக்கள்மீதும் உளமாற அக்கறை கிடையாது. ” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/SLCIkTp