ஆளுநரின் ஆரியம் – திராவிடம் கருத்து குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, “அதற்கெல்லாம் புராணம் படிக்கணும். நான் அந்த அளவுக்குப் படிச்சவன் இல்லை. ஆளுநரிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்?” என்று பகீர் பதிலை எடப்பாடி உதிர்க்க, அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தி.மு.கவினரும் விமர்சிக்க, தமிழக அரசியல் நிலவரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

என்னப் பேசினார் எடப்பாடி?
திராவிடக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆரியம், திராவிடம் என்பதே கிடையாது. திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கி, திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தை தவறாகப் புகுத்தியவர் ஆங்கிலேய மிஷனரி கால்டுவெல்தான். அவர் பள்ளிப்படிப்பைக்கூடத் தாண்டாதவர்” என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சர்ச்சையைக் கிளறிவிட்டார். ஆளுநரின் இந்த கருத்துக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலு என தி.மு.க தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றினர்.
அந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநரின் ஆரிய-திராவிட கருத்து தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப்பேசிய எடப்பாடி பழனிசாமி, “இதெற்கெல்லாம் புராணம் படிக்கணும். நான் அந்த அளவுக்குப் படிச்சவன் இல்லை. இந்தக் கதையெல்லம் படிச்சு சொல்லணும்ன்னா பெரிய ஆய்வு பண்ணணும். ஆய்வுகள் பண்ணினால்தான் அது உண்மையா, பொய்யா என்று தெரியும். ஆளுநரைக் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? ஆரியம், திராவிடம் குறித்த கேள்வியை அறிஞர்களிடம்தான் கேட்டால்தான், அது சரியா, தவறா என்று தெரியும். ஆய்வு செய்யாமல் நீங்கள் கேட்ட கேள்விக்குத் தவறான பதிலைக் கொடுக்கக் கூடாது” என்று அதிரவைத்தார்.

கடுமையாக விமர்சிக்கும் தி.மு.க!
எடப்பாடியின் இந்தப் பேச்சை தி.மு.கவினர் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, `அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு, திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி!’ எனக் கடுமையாக விமர்சித்தனர். அந்த வகையில் தி.மு.க இளைஞரணித் தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “கட்சி பெயரில் அண்ணாவையும் திராவிடத்தையும் வைத்துக்கொண்டு, ஆளுநர் ஆரியம், திராவிடம் இல்லை எனக் கூறிய கருத்துக்கு பதில் சொல்லாமல் அந்த அளவுக்கு படிக்கவில்லை என்கிறார் எடப்பாடி. ஆளுநர் சொல்லிவிட்டதால், நான் தலையிட மாட்டேன் என்கிறார். ஏன் அவ்வளவு பயம்?” என விமர்சித்தார்.
அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ஆரியம், திராவிடம் குறித்து பள்ளி மாணவர்களுக்கே தெரியும். ஆரியத்தால் பாதிக்கப்பட்டு, திராவிட உணர்வுடன் பள்ளியிலேயே மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர். ஆரியம், திராவிடம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் கட்சிப் பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் அவருக்கு அண்ணாவையும் தெரியவில்லை. திராவிடத்துக்கும், ஆரியத்திற்கும் பொருளும் தெரியவில்லை. அவர் எப்படி அந்த கட்சியின் உறுப்பினராக, பொதுச்செயலாளராக ஆனார் என்றே தெரியவில்லை. ஆரியம், திராவிடம் குறித்து தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆறாவது, ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்திலேயே அது இருக்கிறது. திராவிடம் குறித்து தெரிந்து கொள்ளாமல் எப்படி ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்… இது குறித்து தெரியாது என்று அவர் கூறுவது, வெட்கக்கேடாக இருக்கிறது. அவர் என்ன படித்தார், எப்படி இந்த அ.தி.மு.க-விற்கு வந்தார் என்பதே தெரியவில்லை!” என கடுமையாக போட்டுத்தாக்கினார்.

தொடர்ந்து, தி.மு.க செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு ‘புராணம் படிக்கவில்லை’ என்று பயந்து பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி குறை சொல்வதா?” என கண்டனம் தெரிவித்தார். இவைதவிர, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், “தமிழகத்திலே இருக்கின்ற மிகப்பெரிய திராவிட கட்சியின் தலைவர் என்று தன்னை அடிக்கடி அடையாளப்படுத்தி பெருமைப் பட்டுக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ”தமிழகத்தில் திராவிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது” என்று சொல்வது மிகப்பெரும் அவமானம்! காலம் பதில் சொல்லும்!” என விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/Usq2oN4
