ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகாபள்ளி – அலமாண்டா என்ற இடங்களுக்கு மத்தியில் பலாசா பயணிகள் ரயில்மீது, ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

விசாகப்பட்டினம் – ராயகடா பயணிகள் ரயிலின் ஓட்டுநரும், இணை ஓட்டுநரும் உயிரிழந்தவர்களில் அடக்கம் என்று கூறியிருக்கிறார் விஜயநகரம் மாவட்டத்தின் ஆட்சியர். இந்த விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கிறது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி. அதேபோல, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், கடுமையாகக் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

ஆந்திராவில் நிகழ்ந்திருக்கும் இந்த ரயில் விபத்து, கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம், ஷாலிமரிலிருந்து சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம், பாலசோர் ரயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில்மீதும், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்மீதும் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் காயமடைந்தனர்.
கடந்தகாலங்களில், ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில், 1956-ம் ஆண்டு சுமார் 142 பேரின் உயிரைப் பறித்த அரியலூர் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.
நிதிஷ் குமார் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அஸ்ஸாமில் கெய்சல் ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று நிதிஷ் குமார் பதவி விலகினார்.

2000-ம் ஆண்டு, ஒரே ஆண்டில் இரண்டு ரயில் விபத்துகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அன்றைய பிரதமர் வாஜ்பாய் நிராகரித்தார். அதேபோல, 2017-ம் ஆண்டு ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்துதான், ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ‘பெரிய அலட்சியம் இருந்தது. ரயில்வேயை அழித்துவிட்டார்கள். இந்த நாட்டின் ரயில்வே அமைச்சர் யார்… யாருக்கும் தெரியாது. ஆனால், தன்னுடைய இமேஜை உயர்த்துவதற்காக ரயில் பட்ஜெட்டை ரத்துசெய்துவிட்டு, ரயில்களை கொடியசைத்து நிறுத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்… இவ்வளவு பெரிய ரயில் விபத்துக்கு யார் காரணம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யான ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ஒடிசா ரயில் விபத்து குறித்து முதன்முறையாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘வடக்கு கூம்டி நிலையத்தில் சிக்னல் மாற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறும், எலெக்ட்ரிக் லிஃப்டிங் பேரியரை மாற்றுவதற்காக நடைபெற்ற சிக்னல் பணியில் ஏற்பட்ட குறைபாடுகளே விபத்துக்குக் காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நிகழ்ந்தும், ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தற்போது, ஆந்திராவில் 13 பேரை பலிகொண்ட ரயில் விபத்து நிகழ்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

“ஆட்சியாளர்களின் அலட்சியமும், அரசின் தவறான கொள்கைகளும்தான் ரயில் விபத்துகளுக்கு முக்கியக் காரணம்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், ரயில் பாதுகாப்பில் இருக்கும் குறைபாடுகள் பற்றி ரயில்வே நிபுணர்கள் சுட்டிக்காண்பிக்கிறார்கள். “இந்தியா முழுவதும் பழுதுநீக்கப்படாத சிக்னல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. பழுதடையும் தண்டவாளங்களும் முழுமையாகச் சீர்செய்யப்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் நிபுணர்கள்.
பழுதடைந்த சிக்னல்களையும், தண்டவாளங்களையும் சரிசெய்வதில் போதிய அக்கறை காண்பிக்கப்படாவிட்டால், விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாக நீடிக்கத்தான் செய்யும். அதுத்தடுத்து வேகம் கூட்டப்பட்ட ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இது போன்ற சிக்னல் சிக்கல்கள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/tro2JeF
