மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் கடந்த புதன்கிழமையிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தப் போராட்டம், மகாராஷ்டிரா அரசுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்தப் போராட்டம் காரணமாக மராத்தா ஆர்வலர்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கெனவே மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பவன்குலே செல்லும் இடங்களில் கறுப்புக்கொடி காட்டி, போராட்டம் நடத்தினர். பீட் மாவட்டத்திலுள்ள மஜல்காவ் என்ற இடத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கே என்பவரின் வீடு அமைந்திருக்கிறது.

இன்று காலையில் மராத்தா ஆர்வலர்கள் எம்.எல்.ஏ வீட்டின்மீது கல்வீசித் தாக்கினர். அதோடு வீட்டுக்கு வெளியில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கும் தீவைத்தனர். போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியபோது, எம்.எல்.ஏ தன் குடும்பத்தோடு வீட்டில்தான் இருந்தார். போராட்டக்காரரர்கள் எம்.எல்.ஏ வீட்டுக்கும் தீவைத்தனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது. எம்.எல்.ஏ பிரகாஷ், மராத்தா இட ஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் இருந்துவரும் மனோஜ் ஜராங்கேவை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கோபத்தில்தான் போராட்டக்காரர்கள் பிரகாஷ் வீட்டுக்குத் தீவைத்திருக்கின்றனர்.
தீவைப்பு மற்றும் கல்வீச்சில் எம்.எல்.ஏ-வோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கோ காயம் ஏற்படவில்லை. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான அணியில் எம்.எல்.ஏ பிரகாஷ் இடம்பெற்றிருக்கிறார். `போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம்’ என்று மனோஜ் ஏற்கெனவே போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டார். எம்.எல்.ஏ வீட்டின் மீது நடந்த இந்தத் தாக்குதலுக்கு முதல்வர் ஷிண்டே கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மனோஜுக்கு சிகிச்சை கொடுக்க டாக்டர்கள் குழு இன்று இரண்டு முறை வந்தது. ஆனால், மனோஜ் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் அவரின் உடல்நிலை மோசமடைந்துவருகிறது. லாத்தூரில் பெண்கள் தண்ணீர் தொட்டியில் கூடி நின்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் மராத்தா சமுதாயத்துக்கு எந்த வகையில் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது குறித்து மாநில அரசு பரிசீலித்துவருகிறது. ஏற்கெனவே வேறு ஒரு பிரிவினருக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழை மராத்தா சமுதாயத்துக்கும் வழங்க, மாநில அரசு முடிவுசெய்திருக்கிறது. ஆனால், அதை அதிகாரபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/zefIkmK
